Thursday, December 27, 2012

மாணவர் தற்கொலை தடுப்பு முகாம்

எங்கடா ஆளைக் காணோம் என்று தேடிய, தேடாத நண்பர்களுக்கு.... கடந்த சில நாட்களாக எதுவும் எழுத தோன்றாமல் சிந்தனைகளும் நாட்களும் ஓடிக்கொண்டிருந்தன... அந்த தேங்கிய நிலையை உடைக்க என்ன செய்வதென்று யோசித்த போது ஏன் நாம் செய்வதையே பகிர்ந்திட கூடாதென்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு...
தற்சமயம் நான் வேலை செய்வது விழுப்புரம் மாவட்டத்தில். தமிழகத்தின் மிக பெரிய மாவட்டம். மாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்று. அதனை தடுக்க நாங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆசிரியருக்கான விழிப்புணர்வு முகாம். ஒரு வார காலத்தில் மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று ஆசிரியர்களுக்காக இதை நடத்துகிறோம். அதற்காக ஒரு கையேட்டை தயாரித்தோம். அதுவே இந்த பதிவு.

மாணவர் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் - கையேடு:
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களிடையே தற்கொலை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. நம் விழுப்புரம் மாவட்டத்திலேயே ஒரு சிறுமி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலருக்கு மறந்திருக்காது. அதே போல் கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயம் இதே போன்றதொரு முகாம் நம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அந்த அன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஆட்சியர் அவர்களின் முயற்சியால் மாணவர்களிடையே தற்கொலை தடுப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு திறன் வளர்க்க ஒரு செயல்த்திட்டம் உருவாக்கினோம். அதன் முதல் படியாக மாணவர்களுடன் நேரடி தொடர்பிலுள்ள அவர்களின் மதிப்பை பெற்ற தலைமையாசிரியர்களாகிய உங்களுக்கு தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவே இந்த முகாம்.
கலெக்டர் சம்பத் இந்த கையேட்டை வெளியிட்ட போது ...
உடன் எங்கள் இணை இயக்குநர் உதயகுமார், CEO திரு.முனுசாமி மற்றும்  ஆசிரியர்கள்

மாணவர் தற்கொலை – உண்மையான பிரச்சினையா?
National Crime records bureau அமைப்பின் கூற்றுப்படி நாளொன்றுக்கு நாடெங்கிலும் 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் இறக்கின்றார்கள். 2011 வருடம் மட்டும் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 2381 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். (2009ல் 2000 பேர்). இது மொத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 1.8% ஆகும். 14 வயதுக்குட்பட்டவர்களில் மட்டும் 3035 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த எண்களில் இருந்து மாணவரிடையே தற்கொலை என்பது மிகவும் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பது விளங்கும்.
மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்?
இதற்கு ஒரு காரணமென்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தற்கொலையும் ஒரு உயிரின் முடிவு. அதற்காக அவர்கள் தேடும் காரணங்களும் மாறுபடுகின்றன. ஆனால் மேலான காரணங்களை களைந்து விட்டு பார்த்தால் அடிப்படையில் சில பொதுவான காரணங்கள் உள்ளன.
மாணவர் உலகம் மூன்று தளங்களில் இயங்குகிறது. 
  • வீடு
  • பள்ளி
  • நண்பர்கள் மற்றும் விளையாட்டு

இவை ஒவ்வொன்றிலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் மாணவர்களின் மனநலனை பாதிக்கின்றது.
அமைதியான குடும்பச்சூழல் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. பெற்றோரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், அவர்களின் குடி முதலிய பழக்கங்கள் மாணவர்களை அவர்களின் குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்துகின்றன. அதன் விளைவாக அன்பும், தன்னம்பிக்கையும் அவற்றை ஊட்ட வேண்டிய தாய், தந்தையரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. “நான் வேண்டாதவன்” என்ற எண்ணம் அழுத்தமாக அவன் மனதில் பதிகின்றது.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் பெரும்பங்கு கழிவது பள்ளிகளில்தான். அதே போல் பெற்றோரை போல் பல சமயங்களில் அவர்களிலும் மேலாக அவன் எதிர்ப்பார்ப்பது ஆசிரியர்களின் அபிப்பிராயத்தைதான். பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை தேர்வுகள். தோல்வியை காட்டிலும் அவர்களுக்கு மிக பெரிய பிரச்சினையாக இருப்பது குறைந்த மதிப்பெண்கள். காரணம் குறைந்த மதிப்பெண் பெறும் போது அவர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். அந்த ஒப்பீட்டின் விளைவாக அவனுள்ளே “நீ எதற்கும் உதவாதவன்” என்ற எண்ணம் அவனுக்குள் உருவாகிறது. அதே போல் தேர்வில் தோல்வி என்பதும் மிக பெரிய பூதமாக அவனிடம் காட்டப்படுகிறது. “ஜெயித்தால்தான் உண்டு. தோற்றால் வாழ்க்கையே போய்விடும்” என்று திரும்ப திரும்ப சொல்லப்படும்போது தோல்வியடைந்தால் வாழ்க்கையேயில்லை என்று அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.
அதேபோல் மாணவப்பருவத்தில் நண்பர்கள், நட்பு என்பது மிக முக்கியமாக தோன்றுகிறது. நண்பர்கள் தன் மேல் வைக்கும் மதிப்பு அவனின் மனவளர்ச்சிக்கு மிக முக்கியம். ஏதேனும் ஒரு காரணத்தால் (உ.ம். உருவக்குறைப்பாடுகளோ, கூச்ச சுபாவம்) அவன் நிராகரிக்கப்பட்டால் அவன் தனித்து விடப்படுகிறான். அதன் மூலம் “நான் தேவையற்றவன்” என்ற எண்ணம் அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கின்றது.
இவையாவும் மாணவர்களிடையே மனசோர்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனின் அச்சாணியை முறிக்கும் கடைசி சம்பவமாய் ஏதேனும் ஒரு விஷயம் நிகழ்கிறது. அது தேர்வில் தோல்வியோ, ஆசிரியரின் கண்டிப்பாகவோ அல்லது குடும்பத்தாரின் கண்டிப்பாகவோ இருக்கலாம். அதன் பின் இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று சாவை தேடுகிறார்கள்.
தற்கொலை தடுப்பு – ஆசிரியர்கள் பங்கு – சில பரிந்துரைகள்:
தற்கொலை என்பது தீடீர் முடிவல்ல. சிறிது சிறிதாக ஒரு மனிதன் அதை நோக்கி தள்ளப்படுகிறான். முன்பே குறிப்பிட்டிருந்ததை போல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை கழிப்பது பள்ளியில்தான். ஆகவே ஆசிரியர்களே தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு மிக பெரிய உதவியாயிருக்க முடியும்.
1. தற்கொலையின் மிக முக்கிய காரணம் மனசோர்வு. அதை முதலிலேயே கண்டுப்பிடித்து விட்டாலே பாதிக்கும் மேல் தற்கொலைகளை தடுக்கலாம். மாணவர்களிடையே காணப்படும் மனசோர்வின் சில அறிகுறிகளை கண்டறிவது அவசியம்.
1.       தீடீரென்று மதிப்பெண் குறைவது.
2.       படிப்பு, விளையாட்டு என்று எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது.
3.       தனிமையை விரும்புவது.
4.       வகுப்பில் தீடீரென்று பிரச்சினை செய்வது.
5.       பசி, தூக்கம் குறைந்ததென்று கூறுதல்.
6.       நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துதல்.
7.       காரணமில்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்தல்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அந்த மாணவனை அழைத்து பேசுங்கள். பல சமயங்களில் தற்கொலை முயற்சி செய்பவர்கள் தேடுவது தங்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கும் ஒரு நபரைதான்.
2. மாணவர்களிடம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களின் தோல்விகளை பெரிதுபடுத்திக்காட்டாமல் அவர்களை அதன் காரணங்களை ஆராய செய்யுங்கள். அவர்களின் தன்னம்பிக்கையை வளருங்கள்.
3. வகுப்புகளில் நீங்கள் வாழ்வில் சந்தித்த வெற்றிகளையும், தோல்விகளையும் பகிருங்கள். பிரச்சினைகளை சமாளித்த விதத்தை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அவர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக அமையும்.
4. மாணவர்களிடையே அதீத கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டியுங்கள். ஊனம் என்பது அருவறுப்பானதல்ல என்று விளக்குங்கள்.
5. ஒரு மாணவன் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கண்டிக்காமல் அவர்களின் காரணத்தை கேளுங்கள். அதற்கு தற்கொலை தவிர வேறு வழிகள் என்னவெல்லாம் உண்டென்று விளக்குங்கள். அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ, தனிப்பட்ட கவனம் செலுத்துவதோ வேண்டாம்.
6. அவர்களின் பிரச்சினைக்கு காரணம் பெற்றோர் என்றால் அவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் மாணவர்களின் மன நிலை எந்தளவுக்கு பாதித்துள்ளதென்று விளக்குங்கள்.
7. தற்கொலை பற்றி நேரடியாக வகுப்பில் பேசாதீர்கள். அதை விட பிரச்சினைகளை சமாளிக்கும் மற்ற வழிமுறைகளை பற்றி பேசுங்கள்.

மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினையை சொல்ல சரியான நபரில்லாததுதான் பல தற்கொலைகளுக்கு காரணம். அவர்களின் குரலை கேட்க உங்களின் நேரத்தை ஒதுக்கி பொறுமையுடன் இருக்க முடியுமென்றால் பலர் வாழ்கை மாற நீங்கள் காரணமாயிருக்கலாம்.
******************************************************************************************************************************************************************************************************************************************
முகாம் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஒரு வார முகாமின் சுவாரசியங்களை அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

Thursday, December 6, 2012

விந்தை மனிதர்கள், வித்தியாசமான வியாதிகள்...

என் அறிமுகப்பதிவிலேயே மனநோய்கள் சில சமயம் சுவாரசியமானவை என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாய் வெகு விரைவில் மறக்கப்படும் மனநோயாளிகளில் சிலர் மட்டுமே அவர்களின் வியாதியின் அறிகுறிகளால் நினைவில் கொள்ளப்படுகின்றனர். இந்தப்பதிவுத்தொடரில் அது போன்ற சில வினோத அரிய வியாதிகளையும் அவை பாதித்த மனிதர்களையும் பார்ப்போம். 

எங்கள் சிறு வயதில் ஒரு விளையாட்டு உண்டு. தீப்பெட்டிகளின் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு அவற்றை ஒரு கல் கொண்டு கொத்தி வெளியே எடுக்க வேண்டும். அந்த தீப்பெட்டி அட்டைகளில் ஒரு தகுதி வரிசை உண்டு. சிலவற்றுக்கு மதிப்பு அதிகம். முக்கியமாக ஒரு சில சமயங்களில் பின்னால் தவறுதலாக அட்டைப்படத்தை மீண்டும் அச்சிட்டிருப்பார்கள். அவற்றுக்கு இரட்டை மதிப்பு. அந்த காலத்தில் எங்கள் எல்லோருக்குமே அந்த அழுக்கு அட்டைகளை சேகரிப்பதில் ஒரு ஆர்வம்... வெறி... ஒரு நாள் நான் சேர்த்து வைத்திருந்த அழுக்கு அட்டைகளின் நாற்றம் தாங்காமல் அதை தலை முழுகி விட்டுத்தான் வீட்டுக்குள் வர வேண்டுமென்று காதைத்திருகி "அன்பு"க்கட்டளை இடப்பட்டபின் என் நண்பனிடம் அவற்றை அள்ளிக்கொடுத்தேன். அதன் பின் எப்போது அவன் அதைக் கொண்டு விளையாடினாலும் ஏக்கத்துடன் அங்கே சென்று நின்றுக்கொண்டிருப்பேன். அதன் பின் மற்ற விளையாட்டுகள் வந்தன. அந்த அழுக்கு அட்டைகளையும் அவை தந்த வருத்ததையும் நினைவுகளின் கல்லறையில் புதைத்து விட்டு வாழ்க்கையில் நகர்ந்து விட்டேன்.

நாம் எல்லோருமே ஏதோ ஒன்றை மிக ஆசையுடன் சேகரித்துக்கொண்டிருப்போம். பணம், புத்தகம், பாடல், தபால்தலை என்று நமக்கு முக்கியமாக தெரியும் அவைகள் மற்றவருக்கு குப்பையாக தெரியும். ஆனால் எல்லா சேகரிப்புகளும் ஒரு இறுதி தினமிடப்பட்டே வருகின்றன. என்றோ ஒரு நாள் சேர்த்து வைத்த அந்த பொருட்கள் அத்தனையையும் ஏதோ ஒரு காரணத்தால் இழக்கிறோம். அப்படி இழக்க விரும்பாமல் சேகரிக்கும் மனிதன் எவ்வளவுதான் சேர்ப்பான்?...

கோலியர் சகோதரர்களைச் சந்தியுங்கள்....

ஹோமர் மற்றும் லாங்க்லி
1947 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் ஹார்லம் பகுதியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரென்று சொல்லாமல்,ஒரு முகவரியைக் குறிப்பிட்டு அங்கே ஒரு பிணம் கிடப்பதாக மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான். அந்த முகவரியின் சொந்தக்காரர்கள் கோலியர் சகோதரர்கள்.

ஹோமர் மற்றும் லாங்க்லி கோலியர்.அண்ணன் தம்பி.பிறவிப் பணக்காரர்கள்.அவர்கள் பரம்பரை சொத்துதான் அந்த வீடு. திருமணமாகாமல் தன்னந்தனியே வசித்து வந்த அவர்களுக்கு இயல்பாகவே மனிதர்களுடன் பழகுவது பிடிக்காத சங்கதியாயிருந்தது. கூடவே அந்தக் காலகட்டத்தில் ஹார்லம் பகுதி கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. திருட்டு பயமும் ஜாஸ்தி. அவர்கள் மத்தியில் யாரிடமும் பழகாத இவர்களின் குணம் ஒரு புதிராக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. அவர்களிடம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் இருப்பதாக புரளி கிளம்ப அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைவதும் திடீர்திடீரென்று அழைப்பு மணியை அடிப்பது, ஜன்னல் மேல் கல் எறிவது என்று அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. மூத்தவர் ஹோமர் இதற்குள் சக்கர நாற்காலியில் மூட்டுப் பிரச்சினையால் முடங்க, இளையவர் லாங்க்லி மிகவும் பயந்து போனார். அதன் விளைவாக, அவர் மேலும் மேலும் மனிதர்களைத் தவிர்க்கத் தொடங்கினார். ஜன்னல், கதவு என்று எல்லா இடத்தையும் பெரிய பெரிய பெட்டிகள் கொண்டு அடைக்க ஆரம்பித்தார். யாரும் பார்க்காத இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வருவது, சின்னத் தேவைகளுக்குக் கூட மிகத் தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வதென்று மேலும் மேலும் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தார்.

ஒவ்வொன்றாக நாகரீகம் அந்த வீட்டிலிருந்து செல்ல ஆரம்பித்தது. நாங்கள் உபயோகிக்காமல் பில் வந்துள்ளதென்று தொலைப்பேசிக் கட்டணத்தைக் கட்ட மறுக்க, தொலைப்பேசி தொலைந்தது. வருமானம் இல்லையென்று வரி கட்ட மறுக்க, மின்சாரம் மறைந்தது. தண்ணீர் இணைப்பும் அஃதே. ஆனால் எதற்கும் அசராமல் கெரசின் அடுப்பும், பதப்படுத்திய உணவுகளும் கொண்டு சமாளித்தார்.

இதற்கிடையே ஹோமருக்கு மெல்ல மெல்ல கண் பார்வை மறையத் தொடங்கியது. அதற்கும் வெளியே வராமல், தாங்களே வைத்தியம் பார்த்துக்கொள்ள கண் பார்வை போனது. இந்த சமயத்தில் ஒரு முறை ஜப்தி செய்ய வந்த போலீஸ்காரர்களையும், பேங்க் அதிகாரிகளையும் விரட்டியடித்தார்.அப்போது அங்கே இருந்த பேப்பர் மூட்டைகளைப்  பார்த்து,"இது என்ன?" என்று போலீஸ் அதிகாரி கேட்க, அண்ணனுக்கு கண் பார்வை திரும்பும்போது படிக்க என்று பதிலளித்தார் லாங்க்லி. அந்த முறை அவரின் கடன்களை ஒரே காசோலையில் தீர்க்க, அதன்பின் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மெல்ல சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் சீண்டலிலிருந்தும் அந்த சகோதரர்கள் மறைந்தனர்- அந்த தொலைப்பேசி அழைப்பு வரும் வரை...

அந்த வீடு
அழைப்பு மணிக்கு பதிலில்லாமல் போக, கதவை உடைத்து திறந்த போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சி. வாசலை அடைத்து பெட்டிகள். எந்தக் கதவை, ஜன்னலை உடைத்தாலும் பெட்டிகள், தடுப்புகள். அது பத்தாதென்று தாங்க முடியாத நாற்றம் வேறு. வேறு வழியில்லாமல் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட ஆரம்பித்தார்கள். முதல் தளத்தில் ஒரு வழியாக உள்ளே நுழைய இடம் கிடைத்து நுழைந்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. வீடு முழுக்க மேற்க்கூரையைத் தொடும் குப்பைகள்,  தினசரிகள், புத்தகங்கள், டப்பாக்கள்,குப்பையில் கிடந்த சாமான்கள், எட்டு உயிருள்ள பூனைகள் என்று பலவற்றைக் கொண்டு வீட்டை ஒரு புதிர் கிடங்காக மாற்றியிருந்தார்கள். இதில் ஆங்காங்கே குப்பைகளுக்கு நடுவே சுரங்கப்பாதைகள். அவற்றில் யாரும் நுழைவதைத் தடுக்க, கண்ணிகள். அவைகளைத் தட்டினால் அருகே இருக்கும்  குப்பை சரிந்து அமுக்கி விடும். என்னடா இதுவென்று நொந்து போன போலீஸ், அந்த குப்பைகளை கவனமாக அள்ளிக்கொட்ட துவங்கியது.
கூரையைத் தொடும் குப்பை
குப்பையின் நடுவே சுரங்கப்பாதை





இரண்டு நாட்களுக்குப் பின் ஹோமரை கண்டெடுத்தார்கள்.தன் சக்கர நாற்காலியிலேயே உணவில்லாமல் இறந்து கிடந்தார். ஆனால் லாங்க்லியைக் காணோம். தொடர்ந்து குப்பையை அள்ள, ஹோமருக்கு சற்று தொலைவிலேயே அவர் சடலமும் கிடந்தது. அண்ணனுக்கு உணவு கொண்டு வரும்போது, தவறுதலாக அவர் வடிவமைத்த கண்ணியில் அவரே சிக்கிக் கொள்ள, அவர் சேகரித்த குப்பைகளே அவரை நசுக்கிக் கொன்று விட்டது. அதன்பின் அண்ணன் பசி, தாகத்தில் இறந்திருக்கலாம் என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.

அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்ய ஒரு வாரம் பிடித்தது. அங்கிருந்து எடுத்த குப்பையின் அளவு- அதிகமில்லை ஜென்டில்மேன்.....

 140 டன்தான்!!!...

வெளிநாடுகளில் இது போல விசித்திர மனிதர்கள் அவ்வபோது செய்திகளில் தோன்றுவார்கள். அவர்கள் சேர்த்து வைக்கும் குப்பையின் அளவே அவர்களின் பிரபலத்திற்குக் காரணமாயிருக்கும். இது போன்று சேகரிப்பவர்களுக்கு என்ன பிரச்சினை?

Syllogomania or Compulsive Hoarding என்று பேன்சி பெயர்களில் இதை அழைக்கிறார்கள். பொதுவாக இது போன்று சேகரிப்பவர்களுக்கென்று சில பொதுவான குணங்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் வயதானவர்களாகவோ, மன நலம் குன்றியவர்களாகவோ இருக்கின்றனர். யாருடனும் பழகாமல் தனியாக வசிக்கின்றனர். வேறு ஏதோ மனப்பிரச்சினையின் வெளிப்பாடாகவே இது போன்று சேகரிக்கும் பழக்கம் பல சமயங்களில் உள்ளது.

இது போன்று நம் நாட்டிலும் உள்ளனரா? அதிகம் வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருப்பது போன்று இல்லாமல், நம் நாட்டில் குடும்பமாய் வசிப்பதினாலும், தனி மனித சுதந்திரத்தை அவர்கள் அளவுக்கு போற்றாமல் இருப்பதாலும்,  இந்த சகோதரர்களைப் போல் இல்லாமல் சீக்கிரமே கண்டறியப்படுவது காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது "தேவையில்லாமல் குப்பையைச் சேர்க்கிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டை கேட்பதுண்டு. அவற்றின் அடிப்படையான மனோவியாதிக்கு வைத்தியமளித்தால் இந்த பழக்கம் குறைகின்றது அல்லது சில சமயம் மறைகின்றது.

உயிருள்ளவரை ரகசியமாக மறைக்கப்பட்ட வாழ்க்கையை மரணம் வெட்டவெளிச்சத்தில் உரித்துக் காட்டியதை காலத்தின் கோலம் என்பதைத்தவிர என்ன சொல்ல?...

Monday, December 3, 2012

Stress - அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்... 2

STRESS!!! நீங்க நல்லவரா? கெட்டவரா?

எக்ஸாம் நாட்களுகென்று ஒரு தனிக்குணம்உண்டு. காலை எழும்போதே பளிச்சென்று இருக்கும்.பல் துலக்கும் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, சாப்பிடும் போது என்று எந்த ஒருத்தருணத்திலும் வேறு சிந்தனைகளே ஓடாது. படித்ததை விட படிக்காததே  எப்போதும்  அதிகமிருக்கும். இதில் இருக்கிற டென்ஷன் பத்தாதென்று இது வரைக்கும் வெட்டு பழி குத்து பழியாயிருந்தவர்கள் கூட ,"மச்சி! இந்த topic படிச்சிட்டியாடா? ரொம்ப முக்கியமான topic டா. கண்டிப்பா கேள்வி வருது" என்று நாம் படிக்காத தலைப்பையே சொல்லுவார்கள். அதற்கு "படிச்சேன்டா" என்று நண்பன் பதில் தரும்போது ,"ராத்திரி முழுக்க நம்ம கூடத்தானேயிருந்தான்" என்று "கிரி" வடிவேலு கணக்காய் லுக் விட்டு கிளம்பினால் அப்போதுதான் வருஷம் முழுக்க கும்பிடாத பிள்ளையார்  ஞாபகம் வருவார். கும்பிட்டு exam hallக்குள் போய் உட்கார்ந்தால் அடுத்த மூன்று மணி நேரம் போவதே தெரியாது. ஐந்து நிமிடமிருக்கும்போது அரக்க பரக்க பதிலை கிறுக்கி தாளை கட்டிக்  கொடுத்துவிட்டு போய் சாப்பிட்டு படுத்தால் அப்போது வரும் தூக்கத்துக்கு ஈடு இந்த உலகில் கிடையாதென்று தோன்றும். யோசித்துப் பாருங்கள், இது போன்ற நாட்களில் நம்மை முழுவதும் துடிப்போடும் விழிப்போடும் வைத்திருப்பது எது? - எக்ஸாம் என்கிற stress தானே......! அப்போ stressனால ஒரு நல்லது நடந்தா, stress நல்லதுதானே....

இதற்கு  பதில் சொல்லும்முன் பத்ரியின் கதையை பார்த்து விடுவோம். பத்ரி +2 பையன். பயங்கர படிப்பாளி. காலை 5மணிக்கு ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை ஸ்கூல், டியூஷன் என்று பரபரவென்று ஓடுபவன்.அனால் கடந்த ஒரு மாதமாக தாமதமாக எழுகிறான். ஸ்கூல் போகவே கஷ்டப்படுகிறான். tution எட்டிப்பார்ப்பதே இல்லை.வகுப்பில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும், அது படிப்பு சார்ந்ததாகயிருந்தால் ஈடுபட மறுக்கிறான். எல்லாவற்றையும்விட புத்தகத்தை தொடவே மறுக்கிறான். ஆனால் விளையாட்டு,கதைப்புத்தகம் என்றால் அதே ஆர்வத்துடன் இருக்கிறன். அவன் பெற்றோர் பயந்து போய்க் கூட்டி வந்தனர். அவனிடம் பேசிய போது ஒன்று விளங்கியது. அவன் அப்பாவுக்கு அவனை டாக்டராக்க ஆசை. அவனிடம் அடிக்கடி "+2 exam முக்கியம். அதுல கண்டிப்பாக பாஸ் பண்ணிடனும்" என்று சொல்லிக்கொண்டே  யிருப்பார். நாள் முழுக்க இந்த exam பற்றியே பேச்சு. இடையில் ஒரு testல் மதிப்பெண் குறைந்ததிற்கு அவர் கண்டிக்க ஒருக்கட்டத்தில் exam பூதம் போன்று அவனுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது. exam எழுதினாலும் தோல்விதான் கிடைக்கும் என்று அவன் மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதுவே படிப்பென்றால் வெறுப்பாக, பதட்டம் தரும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அவன் புத்தகத்தையே தூக்கிப்போட்டு விட்டான். இப்போது சொல்லுங்கள் - இப்படி ஒரு பையனின் படிப்பை எதிர்காலத்தை பாதிக்கிறதென்றால் எக்ஸாம் என்கிற stress கெட்டதுதானே? 

நல்லவேளை!!! "தெரியலையேப்பா!" என்று சொல்லாமல் இந்தக் கேள்விக்கு விஞ்ஞானம் பதிலளிக்கிறது. 

என் சென்றப் பதிவில், stress என்ற வார்த்தையை தந்த HANS SEYLE என்ற விஞ்ஞானியைப்பற்றி சொன்னேன். அதற்கு முன் சூழ்நிலைகளுக்கும் மனித மனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி அதிகம் அறிந்திராத நம் விஞ்ஞானத்திற்கு ஒரு தெளிவான சாத்தியமான பதிலை தந்தார். அவரின் கருத்துப்படி எந்த ஒரு உயிரினமும் அதற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது அதனை எதிர் கொள்ள தயாராகிறது. இந்த தயார் நிலை அதை அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள உதவும். அதற்கான ரசாயனங்களை சுரக்கிறது. சக்தியை சேமிக்கிறது. விழிப்பாக்குகிறது. இது எல்லாம் அதன் செயல்பாட்டிற்கு உதவினாலும், சில காலம் வரை தான். அதன் பின் மெல்ல மெல்ல அந்த தயார்நிலையே அதற்கு எமனாகிறது. அதனால் செயல் பட முடியவில்லை. அதே போல்தான் மனிதன் பிரச்சினைகளை எதிர் கொள்வதும். exam என்ற stress அந்த எக்ஸாம் நாளன்று நம்மை முனைப்பாக்கி நம் செயல்பாட்டை அதிகரிக்கும்போது நல்லதாயிருக்கிறது. ஆனால் அதுவே தொடர்ந்து இருக்கும் போது நம்மால் தாங்கமுடியவில்லை.நம் performance படுத்து விடுகிறது. ஆகவே stress -நல்லதா? கெட்டதா? அளவான stress நல்லது. அதே அளவுக்கு மீறிச்செல்லும்போது நம்மை உடைப்பதால் கெட்டது.

stress என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்களால் உருவாவதா? ஏன் சிலர் அதிகம் stress அனுபவிக்கிறார்கள்? சிலர் அனுபவிப்பதில்லை. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.......     

Wednesday, November 14, 2012

சர்க்கரை நோயாளிகள் இனிப்பை விரும்புவது ஏன்?...

Stress பற்றிய என் பதிவுத்தொடர் தனியாக தொடரும்... அதில் நிறைய பேச இருப்பதால் அவ்வப்போது மற்ற சில விசயங்களைப் பற்றி தனியாகப் பதிவிடுகிறேன்... இன்று சர்க்கரை நோயாளிகள் தினம்... அவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினை ஒன்றை இன்றுப் பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒரு வயதானவர் வந்திருந்தார். மிகத் தீவிர மனச்சோர்விலிருந்த அவரிடம் பேசும்போது மெல்ல அவரின் மன அழுத்தத்திற்கான ஆரம்ப நிகழ்வைக் கேட்டேன்... முதலில் தயங்கியவர் பின் "என்னை கேவலமாக நினைக்காதீர்கள்..." என்ற பீடிகையுடன் பேசத்தொடங்கினார். 

அவருக்கு சமீபத்தில்தான் சர்க்கரை நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். கண்டறிந்ததும் அவர் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி. உடனே 144 பாய்ந்தது. தனிச்சமையல்... இது நாள் வரை அவர் மிகவும் விரும்பிய அத்தனை உணவுக்கும் தடை... அதையும் மீறி அவர் ஏதாவது உணவை சாப்பிட்டால் உடனே அவரை ஒரு மாறி பார்ப்பது... "வாயை கட்டுங்க..." போன்ற கமெண்ட்கள்... கொஞ்ச காலம் கழித்து அவரின் உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்திருக்கிறது. வீட்டில் எந்த உணவுப்பொருள் வைத்தாலும் உடனே மாயமாகியிருக்கிறது. அதை தெரிந்து அவர் மனைவி கண்டிக்க சண்டைகள் சச்சரவுகள். சிறிது சிறிதாக அவர் மன நிம்மதி இழக்கத் தொடங்கினார். அதன் விளைவாக அவரின் உணவுப்பழக்கத்தைப் பற்றிய குற்ற உணர்ச்சி.... தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற தன்னிரக்கம்... என்றுப் பிரச்சினை வளர்ந்து இறுதியாக தீவிர மன அழுத்தத்துடன் என்னிடம் வந்துள்ளார். இது தெரிந்ததும் அவரின் மனைவியிடம் "ஏம்மா...ஷுகர் அளவு அவருக்கு எப்பவாவது கூடியிருக்கா?" என்றுக் கேட்டேன். "இல்லை சார்... கூடியிருமோன்னு ஒரு பயம்தான்" என்றார்.

இதுதான் பிரச்சினை. நம் சமுதாயத்தில் உணவுக்கட்டுப்பாடு என்பது உணவுகளைத் தவிர்ப்பதென்று ஒரு நம்பிக்கை உலாவுகிறது. நான் மேலே சொன்னது ஒரு Extreme உதாரணம்.  ஆனால் வீட்டில் ஒரு சர்க்கரை நோயாளியோ ரத்தக்கொதிப்பு வந்தவரோ உள்ளவர்கள் அவர்கள் சாப்பாட்டை கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிவார்கள். பல சமயம் ஏன் இந்தளவுக்கு அவர்கள் தவிர்க்க வேண்டியப் பொருட்களை நாடுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. இந்தப்பதிவில் சர்க்கரை நோயாளிகளின் இந்தப் பழக்கத்திற்கான உளவியல் காரணங்கள் மற்றும் அதைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளை பற்றி விளக்குகிறேன்.

முதலில் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமா? ஏன்? என்பதைப்பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். இளம் வயதிலேயே வருவது Type 1. நமக்கு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் மரபியல் ரீதியாக அழிக்கப்படுவதினால் வருவது. இது நம் சமுதாயத்தில் சற்றே குறைவு. ஆனால் நம்மில் பலருக்கு வயதானப்பின் வருவது இரண்டாம் வகை. (Type 2). இதில் இன்சுலின் சுரக்கிறது ஆனால் அது செயல்பட வேண்டிய இடங்களில் அதனால் முழுமையாக செயல்பட முடியவில்லை. எந்த வகையானாலும் அடிப்படைப் பிரச்சினை - "இன்சுலின் இல்லை".

இந்த இன்சுலினின் வேலை நம் திசுக்களுக்குத் தேவையான சக்தியை அதனுள்  செலுத்துவது... சக்தி என்றால் நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் (நாம் வழக்கமாக சொல்லும் ஷுகர்)... இன்சுலின்  இல்லாத போது இந்த சுகர் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் இரண்டு... சக்தி கிடைக்க வேண்டிய திசுக்கள் இன்னும் அதே நிலையிலேயே இருக்கின்றன... அதீதமாக இருக்கும் இந்த ஷுகர் தேவையில்லாத இடங்களில் குறிப்பாக ரத்த நாளங்களில் படிந்து சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்நலம் கெட்டுப் போகக் காரணமாகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் உணவு உட்கொண்டும் திசுயளவில் பட்டினி கிடப்பதுப்போல் இருக்கின்றனர்.   ஆகையால் இவர்கள் மேலும் மேலும் உணவு உட்கொள்ள அது மேலும் ஷுகர் அளவையே அதிகரிக்கறது. ஆகவே இவர்களுக்கு உணவில் கார்போஹைட்ரேட் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் அந்த வியாதி வரும் முன் கடைப்பிடித்த உணவுப்பழக்கங்களை அப்படியே மேற்கொள்ள விரும்புகிறார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை தட்டிக்கழிக்கின்றனர். உணவில் மாற்றம் கொண்டு வருவதை எதிர்க்கிறார்கள். குழந்தைகள் போல் அடம் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். அதையும் மீறி தடுத்தால் யாரும் பார்க்காத நேரம் கள்ளத்தனமாக இரண்டு இனிப்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு கமுக்கமாக உட்காந்திருப்பார்கள்.  ஏன் இந்த உணவு வெறி? இவர்களின் இந்த செயலுக்கு வெறும் திசுக்களில் சக்தி கிடைக்காததே காரணம் என்று நாம் முடிக்க முடியுமா? இதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்கள் என்ன?

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதென்று கண்டறிந்ததும் அவரின் மனநிலையில் ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த விழிப்புணர்வு யுகத்தில் நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் பற்றிய ஒரு அறிமுகம் உள்ளது. ஆகவே இந்த வியாதியின் சிக்கல்கள், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் அவர்களை பயமுறுத்துகிறது. கவலையடையச்செய்கிறது. இந்த உணர்வுகளைத் தவிர்க்க அவர்கள் மனதளவில் தங்கள் வியாதியையும் அதற்கு தேவையான மாற்றங்களையும் மறுக்க ஆரம்பிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக செய்கின்றனர். சிலர் மனதிற்குள் செய்கின்றனர்.இதனால் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை. யோசித்துப்பாருங்கள்... வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும் எத்தனை பேர் தொடர்ந்து போகின்றனர்?. கொஞ்ச நாட்கள் சென்று விட்டு அதை தவிர்ப்பதற்கான காரணங்களை புதிது புதிதாக கண்டுப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஏன்? மனதளவில் உள்ள அந்த மறுதலித்தல். எனக்குத்தான் பிரச்சினையே இல்லையே... இதை ஏன் நான் செய்ய வேண்டும் என்ற உள்மனதின் கேள்வி.

அதேப்போல் அடுத்து எழும் பிரச்சினை குடும்பத்தாரின் எதிர்வினைகள். நோயாளியை போல் அவரின் குடும்பத்தாரும் பயம், கவலை போன்ற உணர்வுகளுக்கு ஆளாகின்றனர்.  மேலும் இதுநாள் வரை நாம் சரியாக கவனிக்காமல்தான்  இது போல் வந்துவிட்டதோ என்ற குற்றயுணர்வும் சேர்ந்து கொள்கிறது. இத்தனை நாட்கள் விட்டதை சேர்த்துப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏற்கனவே மனதுக்குள் மறுதலித்தலில் இருக்கும் நோயாளிகளுக்கு அது ஒரு எதிர்மறை எண்ணத்தையே உண்டாக்குகிறது. கட்டுப்பாடுகளை மீற ஆரம்பிக்கின்றனர். அது அவர்களின் குடும்பத்தாரிடம் மேலும் பிரச்சினையே உண்டாக்க, இது ஒரு முடிவில்லா சுழற்சியாகின்றது.

இன்னும் சிலப் பேருக்கு மனக்கவலைகள், Stress போன்றவற்றை குறைக்க உணவை ஒரு ஊன்றுக்கோலாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்களுக்கு சற்றே சிறிது மன சஞ்சலம் வந்தாலும் உடனே உணவை நாடுவார்கள். உணவு இவர்களுக்கு ஒரு உற்சாகப்பானம்.

இன்னும் ஒரு சில பேர் இருப்பார்கள்.போக வர ஏதாவது எடுத்து வாயில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏன்? இதற்கு நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். பசி என்பது வேறு உணவில் திருப்தி என்பது வேறு. பசிக்கு சாப்பிட்டால் உடம்பில் ஹார்மோன்கள் சுரந்து அதன் பின் பசி எடுக்காது. ஆனால் உணவில் திருப்தி ஏற்படுவதென்பது நம் சுற்றுப்புறதிலிருக்கும் வேறு பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக பசியோடு ஒரு மதியம் ஹோட்டலுக்கு வருகிறீர்கள். புல் மீல்ஸ் சொல்லி சாப்பிட்டதும் உங்கள் பசி தீர்ந்து விடும். ஆனால் திருப்தி வருகிறதா? அந்த வாழைப்பழம், பீடா போட்டப்பின் ஏற்படும் உணர்வே உணவு  உண்ட திருப்தியை தருகிறது. அதே போல் உணவுக்குப்பின் உண்ணும இனிப்பு, நன்றாயிருக்கிறது என்று எக்ஸ்ட்ரா சாப்பிடும் உணவு, தட்டு நிறையவில்லை என்று போட்டுக்கொள்ளும் சாதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். இதை எதிர்க்கொள்ள என்ன செய்வது?

1. சர்க்கரை நோய் வந்ததும் ஒரு நல்ல உணவியல் நிபுணர் (Dietitian) ஆலோசனையைப் பெறுங்கள். முக்கியமாக உங்கள் உணவில் தற்பொழுது உள்ள சர்க்கரையின் அளவைக்கூட்ட கூடிய விஷயங்களை கண்டறியுங்கள். அதை தவிர்ப்பது எப்படியென்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள். ஆலோசித்து ஒரு மெனுவை தயார் செய்யுங்கள். அதை கடைப்பிடியுங்கள். டயட் என்றாலே விரும்பும் உணவுகளை புறக்கணிப்பதில்லை. அப்படி செய்தால் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அதை கடைபிடிக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. டயட் கடினம் ஆவது விரும்பிய உணவை புறக்கணிக்கும் போது தான். அதை விட சத்தான உணவிற்கு மாறுங்கள். விரைவில் அதை ரசிக்க தொடங்கி விடுவீர்கள்.

2. உங்கள் குடும்பத்தாருக்கு வரும் வியாதிகளுக்கு நீங்கள் காரணமாக முடியாது என்பதை உணருங்கள். அதீத கட்டுப்பாடும் அவர்களை குறை சொல்லுவதும்  எந்த பயனையும் தரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு உறுதுணையாய் இருங்கள். Diet Holidays கடைபிடியுங்கள். அதாவது நோய் வந்தவர்கள்  க்ளுகோஸ் குறிப்பிட்ட அளவு வர செய்தால் அவர்களுக்கு அன்றைக்கு டயட்டிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பிய உணவுகளை சமைத்து தாருங்கள். அவர்கள் டயட் கடைபிடிக்காமல் விட்டால் அவர்களை குறைக்கூறாமல் அதற்கான காரணத்தை கண்டறிய முற்படுங்கள். உற்சாகமும் தட்டிகொடுத்தலும் சில சமயம் சினிமாத்தனமாக தோன்றினாலும் நோய் வந்தவர்களுக்கு மிக முக்கியம்.

3. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க டயட் மட்டுமே வழியில்லை. உடற்பயிற்சியும் முக்கியம். உடற்பயிற்சி என்றால் செல் பேசிக்கொண்டே காலாற நடப்பதோ அல்லது நடந்த களைப்பு தீர ஒரு வடையும் டீயும் சாப்பிடுவதோ இல்லை. வேர்வை வர நடங்கள். ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை - எப்பொழுதும் சட்டைப்பையில் ஒரு பிஸ்கட் வைத்திருங்கள் சட்டென்று குறையும் குளுக்கோஸ் அளவை சமாளிக்க.

4. உங்கள் உணவு மேற்கொள்ளும் சூழலை கவனியுங்கள். தட்டின் அளவை குறையுங்கள். தேவையில்லாத நொறுக்கு தீனியை வாங்காதீர்கள்.

5. உங்கள் தீவிர முயற்சியையும் மீறி மீண்டும் மீண்டும் இனிப்பை நாடுகிறீர்களா? எந்தெந்த சந்தர்ப்பத்தில் அப்படி செய்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு டயரியில் குறித்து வைத்தால்  கூட நலம். அதை ஆராயும்போது உங்களுக்கே புலப்படும். உணவை நீங்கள் ஒரு மன அழுத்தம் குறைக்கும் கருவியாக பயன்ப்படுத்துக்கிறீர்களா என்று. ஒரு நல்ல சங்கீதம், ஒரு நல்ல புத்தகம், நண்பர்களிடம் பேச்சு இவை போதாதா? யோசியுங்கள்...

இறுதியாக சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனி உணவு தேவையில்லை. நாம் தினம் உண்ணும் உணவிலேயே சில மாற்றங்களை செய்துக்கொண்டால் போதும். 100 சதவிகிதம் உணவில்  கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டியது அவசியமில்லை. உணவின் மேல் அதீத ஆசை தோன்றுவது எல்லா  சர்க்கரை நோயாளிக்கும் வருவதுதான். அது அவர்களின் தவறில்லை. ஆகையால் குற்ற உணர்ச்சியோ தாழ்வு மனப்பான்மையோ கொள்ளாமல் இதை எதிர்க்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களால் முடியும்.

Sunday, November 11, 2012

அறிந்த வார்த்தை.... அறியாத அர்த்தங்கள்...


மின்சாரத்துடன் ஒரு கண்ணாமூச்சி ஆடி ஒரு வழியாக இந்தப் பதிவை வெளிக்கொண்டு வந்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சில நாட்களுக்கு முன் பாபு என்னைப் பார்க்க வந்தான். “உங்க அட்வைஸ் வேணும் மாமா...” என்றபடி.. “எதுக்குடா?” என்றேன். “ஒரே Stress ஆ இருக்கு. அம்மா படி படின்னு ஒரே டார்ச்சர்.” என்றான். பாபு வயது ஏழு. இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். 

Stress – இந்த தலைமுறையின் All purpose வார்த்தை. தலைவலியில் இருந்து தற்கொலை வரை அனைத்துக்கும் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? அதன் சரியான அர்த்தம் என்ன என்றால் பலர் ஒரு குழப்பமான பதிலே அளிக்கக்கூடும். அனைவரும் அறிந்த இந்த வார்த்தையின் அறியாத பல அர்த்தங்களை இந்த பதிவுத்தொடரில் பார்ப்போம்.


அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்....

சந்திரன் எழுந்தப்போது மணி எட்டு. க்ளையன்ட் மீட்டிங் ஒன்பது மணிக்கு. பரபரவென்று குளிக்க நுழைந்தால் தண்ணீர் வரவில்லை. அவசரத்தில் ஒரு காக்கை குளியல் போட்டுவிட்டு வெளியே வரும் போதே வேர்க்கத் துவங்கியது. பைக்கை முறுக்கி பாய்ந்து வரும்போது சிக்னல் அருகே ஆட்டோவில் லேசாக மோத ஆட்டோக்காரர் பஞ்சாயத்துக்கு வர சந்திரனுக்கு நேரமாகிறதே என்ற நினைப்போடு படபடப்பும் சேர்ந்துக்கொண்டது. ஒரு வழியாக சமாளித்து ஆபீஸ் அடைந்து டீம் லீடர் பார்த்து விடக்கூடாதே என்று பிரார்த்தனை செய்தபடி ஓடி சென்று சீட்டில் உட்காரும் போது தோழி “உன்னை கூப்பிடறாங்க” என்று ஒரு நக்கல் புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. மேனேஜர் அறைக்குச் சென்று கதவைத் தட்டும் போது தலை விண்விண்னென்று தெறிக்க ஆரம்பித்து விட்டது. கதவைத் திறந்ததும் “என்னவோ புயலாம்ப்பா... இன்னைக்கு க்ளையண்ட் மீட்டிங் கேன்சல்... அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...” என்றபடி அவரின் கம்ப்யூட்டரை விட்டு தலை எடுக்காமல் சொல்லி விட்டு வேளையில் முழ்கினார். சீட்டுக்கு திரும்பி வந்த சந்திரனுக்கு தலை வெடித்து விடுவது போல் வலிக்க சோர்வுடன் அரை நாள் வேலைப்பார்த்து விட்டு லீவ் சொல்லி விட்டு கிளம்பினான்.

இது ஒரு உதாரணம்தான். சந்திரனை போல் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு தடவை இது போல் நடந்திருக்கும். இங்கே சந்திரனின் தலைவலிக்குக் காரணம் Stress என்று நம்மில் யாராலும் சொல்ல முடியும். ஆனால் முக்கிய கேள்வி அதுவல்ல. அந்த Stress வரக் காரணம் என்ன? சந்திரனின் சோம்பேறித்தனமானப் பழக்கமா? இல்லை ஆட்டோக்காரருடன் நடந்த வாக்குவாதமா? இல்லை மீட்டிங்கை தவற விட்டால் என்னவாகுமோ என்ற கற்பனை பயமா? சுருக்கமாக சொல்வதென்றால் அந்த Stress அவனுள்ளிருந்து வந்ததா இல்லை வெளிக்காரணங்கள் உண்டாக்கியதா? 

அதேபோல் எழும் மற்றொரு கேள்வி, ஏன் மனதில் எழும் ஒரு பதட்டம் உடலியல் அறிகுறியாக வெளிப்படுகிறது? இரண்டுக்கும் இடையே என்ன தொடர்பு? சரி சந்திரனுக்கு மட்டுமேன் இந்தளவுக்கு பதட்டம் வர வேண்டும்? இதே போன்றதொரு சூழலில் மாட்டிக்கொண்ட எல்லோருமே அவனைப்போல் தான் உணர்வார்களா? ஒரே சூழல் ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான உணர்வை தோற்றுவிப்பது எதனால்?

வரவிருக்கும் வாரங்களில் இந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடையறிவோம்.

Stress – அவசரயுகத்தின் பின்விளைவா???...

பட்டிமன்றத் தலைப்பைப்போல் தோன்றினாலும் பலர் இந்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்த உடனே சொல்வது “எங்க காலத்துலலாம் இப்படில்லாம் கிடையாது சார்... இந்த காலத்துப்பசங்க சரி இல்லை...” என்பதுதான். அது உண்மையா என்று நாம் உறுதி பண்ணிக்கொள்ள முடியாத தைரியத்தில் பேசுகிறார்களோ என்று கூட சில சமயம் தோன்றும்.

இந்த சமுதாயத்திற்கு மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவா? அதிகமில்லை... ஒரு ஐம்பது வருடங்கள் பின் நோக்கி சென்றால் கூட பஞ்சமும் பட்டினியும் தினப்படி கதைகளாயிருந்தன. நம்மால் நமக்குத் தேவையான உணவைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் இறக்குமதி செய்துக்கொண்டிருந்தோம். அதை விடவா இப்பொழுது மோசமான நிலைமையிலிருக்கிறோம்? குடும்பங்கள் சிதறி விட்டன. ஒவ்வொருவரும் தனித்தீவாகி விட்டோம் என்பது உண்மையென்றாலும் மனித உணர்ச்சிகளில் ஆதாரமாக உள்ள பாசம், நட்பு மறைந்து விடவில்லையே!!! ஒவ்வொரு தலைமுறைகளும் தமக்கேயுரிய பிரச்சினைகளை சந்தித்து தீர்வு கண்டு வருகின்றன. ஆகையாலே இந்த தலைமுறைக்கு மட்டுமே இந்த அழுத்தம் இருக்கின்றது என்ற வாதமே கேள்விக்குரியது. அப்படியென்றால் வித்தியாசம் ஏற்படுத்துவது எது? Stress என்ற இந்த வார்த்தையின் அறிமுகம்தான். பழங்காலத்திலேயே நமக்கு நோய்களுக்கும் மனதைப் பாதிக்கும் சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை தெரிந்தாலும் அதை ஒரு விஞ்ஞானப்பூர்வமான விளக்கத்தின் மூலம் புரிந்துக்கொள்ள முயற்சித்தது போன நூற்றாண்டில்தான்.

Stress என்ற வார்த்தையைப் புழக்கத்தில் விட்டது Hans seyle என்ற விஞ்ஞானி. இயற்பியலில் இருந்து இந்த வார்த்தையைக் கடன் வாங்கி அவர் பிரயோகித்தார். இதன் மூலம் அவர் சொன்னது எதை? 

மனதிற்கு அழுத்தம் தரும் எந்த ஒரு உணர்வையும் அவர் Stress என்று குறிப்பிட்டார். அவரின் பின் வந்தவர்கள் பல்வேறு விதங்களில் அதை திருத்த முயற்சித்தும் அதுவே நிலைத்தது.

அழுத்தம் தரும் உணர்வு என்ற வார்த்தையை உபயோகிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அழுத்தம் தரும் எல்லா உணர்வுகளுமே மோசமானவையா???...

அடுத்தப் பதிவில் இன்னும் சற்றே விரிவாகப் பார்ப்போம்...

Thursday, November 1, 2012

கவுன்சலிங் உண்மையில் என்ன ... 2

வணக்கம்...
சென்ற கவுன்சலிங் பதிவை தொடர்கிறேன்.சென்ற பதிவில் நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது எப்படியென்று சொல்வதாக முடித்திருந்தேன்... அதே போல் நிஜமாகவே கவுன்சலிங் என்ன பயன் தரும் என்ற கேள்வியையும் இந்த வாரம் பார்ப்போம்...

பல சமயம் நமக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படைகள் நமக்கு புரியாது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, நமக்கேதும் பிரச்சினையில்லை என்றும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்றும் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை  (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. இது  எல்லோராலும் முடியாது. தவறான ஆலோசனைகளால் நேர விரயமும் மன குழப்பங்களும் தான் மிஞ்சும். ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. கீழ்க்கண்ட விஷயங்களை ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம்...


1. உங்கள் பிரச்சனைகளை,உணர்வுகளை காது கொடுத்து கேட்கவேண்டும்.  இதற்கு Active Listening என்பார்கள்... அதாவது நீங்கள் உங்கள் பிரச்சினையை சொல்லி கொண்டிருக்க அவர் மதியம் சாப்பிட போகும் கோழி கறியை பற்றி யோசித்துக்கொண்டிருக்க கூடாது... உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும். எப்போடா gap கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது... அவசியப்பட்டால் உங்கள் பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டவற்றை உங்களிடம் சொல்ல வேண்டும்... உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ  உங்களை  உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது. இரவினில் வரும் டிவி சேனல் லேகிய வைத்தியர்கள்  இந்த ஜாதி... 

2. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனையை தவிர மற்றவற்றை தர மாட்டார். என் புத்தகம் வாங்கு என் DVD வாங்கு உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று சொல்பவரை கண்டால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.....

3. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக மன நல பிரச்சினைகளைப் பற்றிய அடிப்படை அறிவுடன் இருக்க வேண்டும். அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும். As early as possible... மருந்து சாப்பிட்டால் நீ ஒழிஞ்ச!!!... என்று சொல்லி சரியான சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது. 

4. உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும். உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். நீ எப்படி என்கிட்டே கேள்வி கேக்கலாம் என்று கோபப்பட கூடாது. 

5. உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது.

6. நீங்கள் Second Opinion வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.

இவை எல்லாம் ஒரு நல்ல கவுன்சலரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்க கூடிய அடிப்படை விஷயங்கள். சரி நல்ல கவுன்சலர் கிடைத்து விட்டார் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா... என்றால் அது பிரச்சினையை பொறுத்து. அப்படியென்றால் எந்தெந்தப் பிரச்சினைக்கு கவுன்சலிங் தரலாம்...

கவுன்சலிங் - எதற்கு உதவும்...

மனதை பாதிக்கும்  பிரச்சினைகள் எல்லாமே வியாதிகள் இல்லை. அவற்றுள் பல சாதாரண மனித வாழ்க்கை அனுபவங்கள். ஆனால் அதை எதிர் நோக்க முடியாதவர்களிடம் மனப்பாதிப்பை உண்டு செய்கின்றது. இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பல சமயங்களில் மன நல மருந்துகள் அவசியப்படாது. இவற்றுக்கு உளவியல் சிகிச்சை முறைகளே தேவைப்படும்.

உளவியல் சிகிச்சைகள் (Psychological Therapies அல்லது Psychotherapies) எனப்படுபவை வெவ்வேறு கோட்பாடுகளில் உருவானவை. இவற்றுக்கு ஒரு அடிப்படை கோட்பாடு இருக்கும்... இப்படித்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும்... நாம் பொதுவாக கவுன்சலிங் எடுத்துக்கோ என்று சொல்லும் போது இதுப்போன்ற உளவியல் சிகிச்சை முறைகளையே குறிப்பிடுகிறோம். கவுன்சலிங் என்பது ஒரு வகையான உளவியல் சிகிச்சை முறை மட்டுமே.

உண்மையில் கவுன்சலிங் என்பது ஒரு ஆலோசனை வழங்கலுக்கு மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முடிவெடுக்க உதவும். உங்கள் பிரச்சினைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும். ஆனால் பிரச்சினையை தீர்க்குமா என்றால் தீர்க்காது. உதாரணமாக விபத்தில் கால் முறிந்தவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு ஒரு ஊன்றுகோலும் தருவார்கள். அவரின் கால் குணமடைய உதவுவது அந்த கட்டா... இல்லை அவரின் கையில் உள்ள ஊன்றுகோலா... கவுன்சலிங்கும் அப்படி ஒரு ஊன்றுகோல்தான்.

அந்தந்த பிரச்சினைகளை பொறுத்தே கவுன்சலிங் அமைய வேண்டும். அதை எல்லாவற்றையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணியாக கருதக்கூடாது. நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல் எவ்வாறு மன நல மருந்துகள் உளவியல் பிரச்சனைக்கு அவசியமில்லையோ அதே போல் உளவியல் வைத்தியங்களும் மனோவியாதிகளை முழுமையாக தீர்க்காது. ஏனென்றால் மன வியாதிகள் உருவாவது மூளையின் ரசாயனக் கோளாறுகளால். So எது மனோ வியாதி எது உளவியல் பிரச்சினை என்று எப்படி இனம் பிரிப்பது?... நல்ல கவுன்சலர்கள் தாராளமாய் இதை கண்டுப்பிடித்து விடுவார்கள். ஆனால் ஒரு வேளை இதை இனம் காண முடியாத அல்லது இனம் கண்டும் உங்களை தேவையான நல்ல சிகிச்சை பரிந்துரைக்க விரும்பாத போலிகளாய் இருந்தால் அங்கே கவுன்சலிங் உதவாது. அதற்காகத்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் நல்ல கவுன்சலர்களின் தகுதிகளை குறிப்பிட்டிருந்தேன். When in doubt, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு விட்டு அணுகுங்கள்.


இறுதியாக எந்த சிகிச்சை முறை என்றாலும் அதன் வெற்றியை தீர்மானிப்பது ஒன்றுதான் - COMMITMENT - குணப்படுத்த வேண்டும் என்று டாக்டருக்கும் குணமாக வேண்டுமென்று நோயாளிக்கும். தீர்வு என்னவென்று டாக்டர் சொன்னாலும் அதை பின்பற்ற போவது நோயாளிதான். ஆகவே இது போன்ற மனநல சிகிச்சை முறைகளில் பயன் பெறுபவரின் பங்களிப்பும் மிக மிக முக்கியம். நம் மக்களிடையே தென்படும் easy & quick fix மனப்பான்மை இதற்கு உதவாது. இதை புரிந்துக்கொண்டு உங்கள் மனநல மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரம் நலம் பெறுவீர்கள்.

அடுத்த வாரம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி பார்ப்போம்.

நன்றி.

Wednesday, October 24, 2012

கவுன்சலிங் - உண்மையில் என்ன...


பலருக்கு மனநோய்க்கான வைத்தியம் என்றாலே அது கவுன்சலிங் தான். ஆனால் அதை ஒரு சர்வரோக நிவாரணிப் போல ஒரு கருத்தும் உள்ளது. அது சரியா? உண்மையில் கவுன்சலிங் என்ன செய்யும்? இந்த பதிவில் பார்ப்போம்....
தமிழர்களின் அகராதியில் மனநல வைத்தியம் என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் பிரிவுக்கு வரும்போது  "கொஞ்ச நாளா ஒரு மாரி இருக்கான் சார்... கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூடி வந்தோம்" என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே சரியான தெளிவில்லாமல் இருப்பதால் கவுன்சலிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஏமாற்றி காசுப்பிடுங்கும் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. இந்த பதிவில் கவுன்சலிங் என்ற சிகிச்சை முறையின் பயன், பயனின்மை பற்றி சற்றே விரிவாக முடிந்தளவுக்கு எளிதாக சொல்கிறேன்.

மன நோய்களுக்கு சிகிச்சை என்பதே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானதுதான். அதற்கு முன் மாட்டு மந்தைகளை போல மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் அடைத்து வைக்க மட்டுமே முடிந்திருந்தது. அந்த சூழ்நிலையில்தான் சிக்மண்ட் பிராய்ட் தோன்றினார். அது வரை புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த மனதின் இயக்கத்தை புரிந்துக்கொள்ளவும் அதற்கு விஞ்ஞான சாத்தியமுள்ள விளக்கமொன்றை தந்ததால் பலர் அவரை பின்பற்றத்தொடங்கினார்கள். 1930கள் வாக்கில் அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கிட்டத்தட்ட மன நல மருத்துவ உலகின் MGR என்றே அவரை சொல்ல வேண்டும். ஆனால் அந்த சமயத்தில்எதிர்க்கவே முடியாதென்றிருந்த அவரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது.  காரணம் ப்ராய்ட் மனிதனின் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது செக்ஸ் மட்டுமே என்று கருதினார்.  மனிதர்கள் இயல்பாகவே அழிவு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டவர்கள் என்ற ப்ராய்டின் கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. இது  மனித மனதை அதன் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை  குறுகிய பார்வையுடன் ஆராய்வது என்று கருதினார்கள். ப்ராய்டின் சிகிச்சை முறைக்கு மாற்றாக புது வழி முறைகளை உருவாக்க தொடங்கினர். அவற்றில் கவுன்சலிங் என்ற இந்த வழிமுறையும் ஒன்று.

இதன் அடிப்படை சித்தாந்தம் எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையை நல்ல திசையில் கொண்டு செல்லவே எண்ணுகிறான்.ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தவறான முடிவெடுக்கிறான். அந்த தவறுகளின் விளைவாக பிரச்சனைகள் தோன்றும்போது அவனுக்கு அவன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் ஒரு துணை தேவைப்படுகிறது.  So ஒரு நல்ல கவுன்சலரின் வேலை அவனுக்கு அவன் எடுக்கும் முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை எடுக்க தூண்டிய காரணிகளை ஆராய்ந்து தெளிவான முடிவெடுக்க உதவுவதுதான். 

கவுன்சலிங் - உண்மையில் என்ன...

கவுன்சலிங் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொடுத்து கொள்கின்றார்கள். ஆனால் அனைவரும் புரிந்து கொண்ட ஒரே விஷயம் - கவுன்சலிங் ஒரு பேச்சு வைத்தியம் (TALK THERAPY). இதை ஏன் சொல்கிறேன் என்றால் மருத்துவராயில்லாத சிலர் கவுன்சலிங் தருகிறேன் என்று கிளினிக் ஆரம்பித்து விட்டு மனநல மருந்துகளை எழுதிக்கொடுக்கின்றனர்.  மருந்துகளின் செயல்பாடறியாத இவர்கள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிட்டால் உடலுக்கு கேடு வருவதுதான் மிச்சம். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் Consult செய்பவர் மனநல மருத்துவர் (PSYCHIATRIST)  அல்லாத பட்சத்தில் கவுன்சலிங் பேர்வழிகள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிடாதீர்கள்...

சரி விஷயத்துக்கு வருவோம்... கவுன்சலிங் என்பது பேச்சு வைத்தியம் என்று சொன்னேன்... அதில் என்னதான் செய்ய வேண்டும்...

வேற என்ன... பேசத்தான் வேணும்!!!....

அடப்போய்யா... அதுக்கேதுக்கு கூட்டிட்டு வரணும்... அதான் வீட்லயே நாங்க நிறையா அட்வைஸ் பண்ணிட்டோமே என்று சொல்லும் முன் பொறுங்கள்... 

அட்வைஸ் என்பது வேறு... கவுன்சலிங் வேறு...

கவுன்சலிங் செய்வதின் அடிப்படையே நம்பிக்கைதான்... "நீயும் என்னை போல் ஒரு மனிதன்... ஒரு சூழ்நிலை காரணமாக உனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சமாளிக்க உன்னால் முடியவில்லை... அதனால் நீ குறைச்சல்... நான் உன்னை விட உசத்தி.. எனக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை... உன்னால் உன் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்... அந்த நம்பிக்கையோடே உன்னை பார்க்கிறேன்..." என்று அணுகுவதே சரியான கவுன்சலிங்... அதாவது நம்மை அணுகுபவர்களுக்காக முடிவுகளை நாம் எடுக்காமல் அவர்கள் எடுக்க உதவி செய்வதே கவுன்சலிங்... முடிவை நாம் எடுத்தால் அது அட்வைஸ்...

உதாரணமாக... ஒரு கான்சர் நோயாளியிடம் "தோ.. பாரு... ஏற்கனவே சிகரெட் பிடிச்சு பிடிச்சு நுரையீரல் பாதிச்சுருச்சு... இனியும் குடிச்சா செத்துத்தான் போகணும்... ஒழுங்கா இப்போவே நிறுத்திடு...." என்றால் அது  அட்வைஸ்.... மாறாக அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கி எது அவனை சிகரெட் பிடிக்க தூண்டுகிறதுதென்று அவன் உணருமாறு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளை உணர செய்து அதன் பின்னும் முடிவெடுக்கும் பொறுப்பை அவனுக்கே விட்டால் அது கவுன்சலிங்....

இதை படிக்கும்போதே உங்களுக்கு தோன்றியிருக்கும்... இப்படியெல்லாம் யார் செய்ய முடியுமென்று... So that brings us to the next question....

 யார் கவுன்சலிங் கொடுக்கலாம்??

அடிப்படை கல்வி தகுதியும், Active listening என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும்  உள்ள யார் வேண்டுமானாலும் நல்ல கவுன்சலர் ஆகலாம். ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் Psychology graduate அல்லது Doctorate  முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses  உள்ளன - அதை முடித்தவர்களோதான்  நிஜமாகவே கவுன்சலர்களாக பணியாற்ற முடியும். அடுத்த முறை இது போன்று கவுன்சலிங் கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள். எந்த துறையை விடவும் இதில் போலிகள் அதிகம். No counselling is better than wrong counselling. 

சரி.. படித்தால் மட்டும் ஒருவர் நல்ல கவுன்சலிங் தந்து விட முடியுமா... நல்ல கவுன்சலரின் தகுதிதான் என்ன????

அடுத்த பதிவில் தொடர்கிறேன்...

Saturday, October 20, 2012

கம்பிகளும் தூண்களும்...

வணக்கம்!

சென்ற பதிவில் மனநோய் வருவதற்கான அடிப்படைக்காரணிகளை பார்த்தோம். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் யாருக்கு மனநோய் வருமென்று தீர்மானிக்கும் விஷயங்களைப் பார்ப்போம். இந்த பதிவில் நான் உபயோகித்துள்ள படம் "Stephen Stahl" என்ற விஞ்ஞானி இதை விளக்க பயன்படுத்துவது. எளிமையாக மனநோய் பற்றிய விளக்கங்கள் தருவதில் வல்லுனர். அவருக்கு நன்றி.

மனநோய் வந்தவர்களை சந்திக்கும் போது தவறாமல் கேட்கும் கேள்வி "உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மனநோய் உண்டா?" என்பதே. சில சமயம் ஆமென்று பதில் வரும். பல சமயங்களில் இல்லையென்று பதில் வரும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் வந்தால் மற்றொருவருக்கும் வருமா... நவீன விஞ்ஞானம் இதற்கென்ன பதில் சொல்கிறது....

பொதுவாக விஞ்ஞானபூர்வமாக எந்த ஒரு நோயும் மரபுரீதியாக வருமென்று சொல்வதற்கு ஒரு கருமுட்டை இரட்டையர்களில் ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவருக்கு நோய் வரும் வாய்ப்பு எவ்வளவு என்பதே ஒரு குறியீடாக கருதப்படுக்கிறது. அதன்படி பார்த்தால் மனநோய்கள் 60சதவீகிதமே மரபு ரீதியாக வர வாய்ப்புள்ளது. அப்படியென்றால் மிச்ச 40% பேருக்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதை விளக்க ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.....


மனதை ஒரு தொங்குப்பாலம் போல கற்பனை செய்துக்கொண்டால், அதை தாங்கிப் பிடிக்கும் கம்பிகளே நமக்கு மரபு வழியாக வரும் நரம்பியல் அமைப்புகள். அந்த பாலத்தை கடக்கும் வாகனங்களே நம் வாழ்வில் நம்மை தாண்டும் பிரச்சனைகள். கம்பிகள் பலமாய் இருந்தால் சிறிய வாகனங்களும் (பிரச்சனைகளும் ) கடக்கலாம், பெரிய வாகனங்களும் கடக்கலாம். மனநோய் வரும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த கம்பிகள் (நரம்பியல் அமைப்புகள்) பலமற்று இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பலமற்று இருக்கின்றன என்பதைப் பொருத்து எப்போது மனநோய் வருமென்று தீர்மானமாகிறது. சில கம்பிகளே பலமில்லாமல் இருக்கின்றன என்றால் அந்த பாலம் சிறிய வாகனங்களை தாங்கும். ஆனால் பெரிய வாகனங்கள் கடக்கும்போது உடையும். அதே பல கம்பிகள் உளுத்துப்போயிருந்தால் சின்ன வாகனம் கூடக் கடக்கமுடியாது.இது போலவே சிலர் சின்னப்பிரச்னையை கூட  எதிர்க்கொள்ள முடியாமல் மனநோய் வாய்ப்படுக்கின்றனர்.சிலரோ தாங்கமுடியாத பிரச்சனைகள் வரும்போதே நோயாளிகள் ஆகின்றனர்.

"சரி குடும்பத்துல நிறைய பேருக்கு இருக்கு... ஆனாலும் மனநோய் வராமா இருக்கறவங்க இல்லையா?..." மேலே இருக்கும் படத்தை நன்றாகப் பாருங்கள். அந்த பாலத்தை கம்பிகள் மட்டுமா தாங்கிப்பிடித்துள்ளன??? இருபுறமும் உள்ள தூண்களும் தாங்கியுள்ளதல்லவா... அந்த தூண்களே ஒருவரின் உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான பலம். வரும் பிரச்சனையை பகிர்ந்துக்கொள்ள யாரும் இருந்தாலே பிரச்சனையின் வீரியம் குறையும். அதேப்போல் நமக்கு தோள் கொடுக்கும் குடும்பம், உற்சாகப்படுத்தும் சூழல்கள் எல்லாமே அவசியம்.

மனநோய் வைத்தியம் என்றாலே நம்மில் பலருக்கு கவுன்சலிங்தான். உண்மையில் கவுன்சலிங் என்றால் என்ன? அதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வா? அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

Wednesday, October 10, 2012

மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்....


வணக்கம்!
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மனம் திறந்து... மனநலம் பற்றி நிறைய பதிவுகள் பத்திரிக்கை குறிப்புகள் இப்பொழுது வருகின்றன. அவற்றில் சில தற்குறிகள் தரும் விவரங்களைப் படித்து விட்டு கடுப்பாகி ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதன் பின் எப்படி எதை சொல்லுவது என்று மிகவும் குழம்பிப் போய் பேசாமல் ஒரு பதிவுடன் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நண்பர்கள் காட்டிய உற்சாகமும் ஆதரவும் இன்று மீண்டும் என்னை பதிவிட வைத்துள்ளது. இனி முடிந்தளவுக்கு வாரம் ஒரு முறையாவது பதிவிட வேண்டுமென்று உத்தேசித்துள்ளேன். இந்த வார பதிவுகளில் ஒரு அடிப்படைக்கேள்வியை பார்ப்போம்....
 மனநோய்கள் ஏன் வருகின்றன???....

மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்....
"ஏதோ வேலைப்பாடு பண்ணிட்டாங்க"
"எல்லாம் Stress தான்"
"Society மாறிடுச்சுல அதான் பிரச்சனை"
"மூளையில ஏதோ பிராப்ளம்... Exacta காரணம் தெரியலை..."

இவையெல்லாம் மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்கள். ஒவ்வொருவரின் படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பதில்கள் வந்தாலும் உண்மையான பதில் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே...
மன நோய் ஏன் ஏற்படுகிறது... ஒரே குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மன நோய் ஏற்படுவதையும் மற்றொருவருக்கு ஏற்படாமல் இருப்பதையும் தீர்மானிப்பது எது?... 50 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்றைய அறிவியல் இந்த கேள்விகளுக்கு சற்றேறக்குறைய தெளிவான பதில்களை வைத்துள்ளது. இந்த பதிவில் அறிவியல் ரீதியான விளக்கங்களை முடிந்தளவுக்கு டெக்னிகல் வார்த்தைகளை தவிர்த்து தர முயற்சிக்கின்றேன்.

ஆதி காலம் தொட்டு இருந்து வரும் ஒரு கேள்வி மனம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? உடம்பிலா... அல்லது அரூபமாய் வேறு எங்காவதா? முதலில் தத்துவரீதியான விவாதமாய் இது இருந்த போது Rene Descartes என்ற அறிஞர் மனம் வேறு உடல் வேறு... என்றார். அந்த நம்பிக்கை 60 வருடங்களுக்கு முன் வரைக் கூட இருந்தது. பிராய்டு காலத்தில் எல்லாம் மனப்பிரச்சனைகள் வரக்காரணம் மூளையில் இருக்கலாம் என்றாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். காரணமில்லாமல் இல்லை.CT, MRI போன்ற வசதிகள் இல்லாத அந்த காலத்தில்  மன நோய் கொண்டவரின் மூளையை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பெரிதாய் ஒரு மாற்றமும் தெரியவில்லை. மாரடைப்பு, பக்க வாதம் என்று எல்லா  நோய்களும் அது தாக்கும் உறுப்பை பாதிக்கின்றன. அது போல் வெளிப்புற தோற்றத்தில் (Morphology) எதுவும் தெரியாத போது எப்படி மனம் மூளையில் உள்ளது என்றால் ஒப்புக்கொள்ள முடியும்???? 1950களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது.

1952 - உலகில் முதல் முறையாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் மன நோய்க்கு ஒரு மருந்தை கண்டுப்பிடித்தனர். அதன் பெயர் - Chlorpromazine. அதற்கு முன்னும் பல மருந்துகள் இருந்தாலும் இதன் வித்தியாசம் என்னவென்றால் முழுவதும் சுயத்தை இழந்து சமூகத்துக்கும் தனக்குமே பாரமாய் வாழ்ந்து வந்த பல தீவிர மன நோயாளிகளைக் கூட இது குணப்படுத்த ஆரம்பித்தது. அது மருத்துவ உலகில் ஒரு புயலை கிளப்ப ஆரம்பித்தது. மன நல மருத்துவம் ஒரு புதிய பாதையில் காலடி எடுத்து வைத்தது.

எப்படி இந்த மருந்து வேளை செய்கிறது என்று ஆராய்ந்ததில் விஞ்ஞானிகள் ஒன்றை கண்டுப்பிடித்தனர். டோபமின் (Dopamine) என்ற மூளையின் ரசாயனம் இந்த மருந்தினால் மாற்றமடைவது தெரிய வந்தது. அத்துடன் ஒரு கேள்வி எழ ஆரம்பித்தது. - மனநோய் வர ஒரு உடல் மாற்றம் காரணமாக இருக்குமென்றால் அதற்கு முன் அளிக்கப்பட்டிருந்த உளவியல் விளக்கங்கள் எல்லாம் உடான்சா.... உடான்ஸ்தான் என்றொரு சாரார் தர்க்கம் செய்து முழுமையாக உளவியல் விளக்கங்களை நிராகரித்தனர். மற்றொரு பக்கமோ உளவியல் வல்லுனர்கள் காலத்தால் நிரூபிக்கப்பட்டு வந்த விளக்கங்கள் என்று சொல்லி சில விளக்கங்களை கை விட மறுத்தனர். இருக்கிற குழப்பம் போதாதென்று மற்றுமொரு தரப்பு விஞ்ஞானிகள் புதிதாய் ஒரு காரணியை கொண்டு வந்தனர் - சமூகம். மனிதன் தனித்தீவில்லை. அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அவன் செயல்களைப் பாதிக்கிறது. அதுவும் அவனுக்கு மனநோய் வரக்காரணம் என்பது அவர்கள் argument. ஒவ்வொரு தரப்பும் அதன் வாதத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்க, அதன் முடிவில் George Engel என்ற விஞ்ஞானி ஒரு பாப்பையாத்தனமான ஒரு தீர்ப்பைக் கூறினார்.
“அட! மூணுமே காரணம்தான்யா!!!”
அதற்கு அவர் தந்த பெயர் – Biopsychosocial theory…
Biological – ஒரு நோய் வரக்காரணமாக இருக்கும் உடலியல் மாற்றங்கள். நரம்புகளின் தொகுப்பே மூளை. அதன் இயக்கமே மனம். இயக்கம் என்று நான் குறிப்பிடுவதில் தான் சூட்சுமம் உள்ளது. மூளை எவ்வாறு இயங்குகிறது. நம் மூளையின் நரம்புகள் ஒன்றோடொன்று தொடர்புக்கொள்ள சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றன. Neurotransmitter எனப்படும் அந்த ரசாயனங்கள் ஒரு நரம்பிலிருந்து மற்றொன்றுக்கு செய்தி எடுத்துச்செல்கின்றன. அவற்றின் அளவில் கூடவோ குறையவோ மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவே மனநோய் ஏற்படுகிறது. எந்த ஒரு மன நோய்க்கும் இதுவே அடிப்படை. ஆனால் சில நோய்களில் இது மட்டுமேயன்றி வேறு சில காரணிகளும் இருக்கின்றன.
Psychological – மனநோய் ஏற்படக் காரணம் நரம்பியல் மாற்றங்கள் என்றால் அவை வெளிப்படுவதில் உளவியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மனஅழுத்தம்(Depression) ஏற்பட Serotonin என்ற ரசாயனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன் குறைவினால் ஏற்படும் வருத்தம், நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த உணர்ச்சிகளோடு தன்னை, உலகை, எதிர்க்காலத்தை அவர்கள் மதிப்பிடும்போது அவை மேலும் அந்த உணர்வுகளை அதிகரிக்க செய்து ஒரு மீள முடியாத சுழற்சியில் தள்ளிவிடுகின்றன. இது போல் சில நோய்களில் உளவியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன
Social – சமுகம் எனும்போது நாடு, இனம் என்று மட்டுமே அர்த்தம கொள்ளக்கூடாது. நம் நண்பர்கள், சொந்தங்கள் ஏன் குடும்ப உறுப்பினர்கள் கூட நம்மை சுற்றியிருக்கும் சமூகம் தான். மனநோய் வந்தவர்களை வெறுத்து ஒதுக்குவது மட்டுமில்லை, அதீதமாய் அவர்களை கவனிப்பதும் அவர்களின் இயல்பான ஒவ்வொரு செய்கைகளுக்கும் அர்த்தம் கற்பித்து பார்ப்பதும் கூட மனநோயை அதிகரிக்கச் செய்யும்.
இந்த Biopsychosocial model மனநோய் என்றில்லை எந்த ஒரு வியாதிக்கும் உண்டு. ஆனால் மனநல மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் இன்னும் சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மனநோயால் பாதிக்கப்படுகிறார். மற்றொருவர் மனநோய் வர எல்லா காரணங்கள் இருந்தும் பாதிக்கப்படுவதில்லை... ஏன்???....

அடுத்தப் பதிவில் பார்ப்போம்....

என்றும் உங்கள் நலம் விரும்பும்
மரு.ஆவுடையப்பன் M.D.,(Psychiatry)

Friday, August 24, 2012

முதல் பதிவு - மனம் திறக்கும் முன்...




வணக்கம்,

நான் ஆவுடையப்பன். மனநல மருத்துவன். இந்த வலைப்பதிவை நீங்கள் வாசிக்க துவங்குமுன் உங்கள் நேரத்தில் சற்றே எனக்கு தர வேண்டுகிறேன்.
மனம் திறந்து.... இந்த தளத்தின் அவசியம் என்ன... இன்று எல்லா பத்திரிக்கையிலும் சினிமாவிலும் மனநோய்கள் அதிகம் பேசப்படுக்கின்றன, சித்தரிக்கப்படுக்கின்றன. ஆனால் வெகு சிலரே அதை பற்றி முழுமையாக ஆராய்ந்து எழுதுகின்றனர்.(உ. ஒரு மனிதனின் கதையில் சிவசங்கரி, அந்நியனில் சுஜாதா). பல சமயம் வழங்கப்படும் செய்திகள் அரைக்குறையாகவும் சில சமயம் உளறல்களாகவும் உள்ளது நிதர்சன உண்மை. நம்பகமான செய்திகளுக்கென்று ஒரு தளம் உருவாக்கும் ஆசையின் விளைவே இந்த வலைப்பதிவுகள். இந்த பக்கங்களில் காணப்படும் விஷயம் அனைத்தும் 100% மருத்துவ ரீதியான உண்மைகள். இதில் காணப்படுவதில் உங்களுக்கு சந்தேகங்களோ கருத்து வேறுபாடுகளோ இருப்பின் தாராளமாக பகிர்ந்துக்கொள்ளுங்கள். பதிலளிக்கிறேன்.
அதேபோன்று மனநலம் பற்றிய செய்திகளில் முக்கால்வாசி Sex பற்றியே உள்ளன. மிக முக்கியமான பலரின் வாழ்வை பாதிக்கின்ற பல வியாதிகள் பற்றி யாருமே பேசுவதில்லை. நம்மில் பலர் இதுப்போன்ற விஷயங்களை படிப்பது சுவாரசியத்துக்காக என்று அதற்கொரு காரணமும் கற்பிக்கப்படுகிறது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் செக்ஸ்சை விட இந்த வியாதிகள் சுவாரசியமானவை , கொடூரமானவை. ஒரு மனிதன் தன் மனதை இழக்கும்போது தன் மனிதத்தன்மையே இழக்க நேரிடுகிறது. “பைத்தியம்” என்ற பட்டம் கட்டப்படுவதால் பந்தங்களை, பரிவை, நட்பை, மரியாதையை ஏன்... அடிப்படை மனிதயுரிமைகளை கூட இழக்கின்றான். ஆனால் இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இதில் பல வியாதிகள் சரிவர மருந்து உட்கொண்டால் குணமாக கூடியவை – at the least தடுக்கப்பட கூடியவை. சரியான மருத்துவ விளக்கங்கள் தெரியாததாலும் புரியாததாலும் பலர் தேவை இல்லாத சிகிச்சைகளை மேற்கொண்டு அநாவசியமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே நீங்கள் எதற்காக இந்த பக்கங்களை படித்தாலும் சரி, உங்களாலான உதவியாய் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.(Share Button ஒவ்வொரு பதிவின் கீழும் இருக்கின்றது.) உங்கள் நேரத்துக்கு நன்றி. வாருங்கள்.

மனந்திறப்போம்.....