மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. பலருக்கு மன நல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன்.
1. மனநல மருந்துகள் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன?
மனநல பிரச்சினைகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலேயே ஏற்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.(பார்க்க ;மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்.... ) இந்த மாற்றங்களை சரி செய்வதே மனநல மருந்துகளின் நோக்கம்.
மனநல பிரச்சினைகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலேயே ஏற்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.(பார்க்க ;மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்.... ) இந்த மாற்றங்களை சரி செய்வதே மனநல மருந்துகளின் நோக்கம்.
2. மனநல மருந்துகள் தூக்கமாத்திரைகளா?
இல்லை. மன பிரச்சினைகளை போல மனநல மருந்துகளும் பல்வேறு வகைப்படும். அவற்றின் ஒரு பக்கவிளைவே தூக்கம். எல்லா மருந்துகளும் தூக்கம் தராது. இந்த பக்க விளைவு நாளாக நாளாக குறைந்துவிடும்.
3. மனநல மருந்துகள் போதை பொருளா? பழக்கம் தருபவையா?
மனநல மருந்துகள் பழக்கம் தருபவை அல்ல. அவற்றை எவ்வளவு காலம் எடுத்தாலும் அவை நம்மை அடிமைப்படுத்தாது. அவை எடுப்பதால் மூளையின் மாறுதல்கள் சரி செய்யப்படுமே ஒழிய அவை இல்லாமல் வாழ முடியாது என்பது போன்ற நிலையை ஏற்படுத்தாது.
4. மனநல மருந்துகள் எடுத்தால் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியது வருமா?
மனநல பிரச்சினைகள் நீரிழிவு, ரத்தகொதிப்பு போன்ற நோய்களை போன்றவை. எவ்வாறு இவைகளை கட்டுபடுத்த மாத்திரைகளை எடுக்கிறோமோ அது போல் மனநல பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு மருந்துகள் எடுப்பது அவசியப்படலாம். மனநல பிரச்சினைகள் பல்வேறு வகைப்படும். சிலருக்கு மரபியல் மற்றும் பல காரணத்தால் மீண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படும். இது போல் அடிக்கடி ஏற்பட்டால் மூளையில் சில மாறுதல்கள் ஏற்படும். அதனால் அடுத்தடுத்து வரும் போது சீக்கிரம் சரியாகாது. அதிக மாத்திரைகள் தேவைப்படும். நோயின் தீவிரம் அதிகரிக்கும். ஆகையால் அவ்வாறு அடிக்கடி வருவதை தடுக்க சில காலம் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். நோயின் தீவிரம் மற்றும் சில காரணங்களை வைத்து எவ்வளவு காலம் என்பது மருத்துவரால் முடிவு செய்யப்படும். சராசரியாக ஆரம்ப கட்டங்களில் இது 6 மாதங்கள் முதல் இரண்டு வருடம் வரை இருக்கலாம். வெகு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படலாம்.
5. மனநல மருந்துகள் உடலை பாதிக்குமா? பக்கவிளைவுகள் மிக்கதா?
எல்லா மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. ஆனால் அவை எல்லோருக்கும் வர வேண்டிய அவசியமில்லை. மனநல மருந்துகள் பொதுவாக நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தாது.
6. கர்ப்பம் மற்றும் குழந்தைக்கு பால் கொடுத்தல் மனநல மருந்துகள் எடுக்கும் போது பாதுகாப்பானதா?
பல சமயங்களில் மனநல மருந்துகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாக கொடுக்கலாம். ஆனால் மனநல மருந்துகளில் சில கர்ப்பகாலத்தில் மற்றும் பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டியது இருக்கும். உங்களின் மருத்துவரின் ஆலோசனை படி செயல் படுவது நல்லது.
7. மனநல மருந்துகளை விட்டு விட்டு எடுக்கலாமா?
இவ்வகை மருந்துகள் எடுக்க எடுக்க ரத்தத்தில் அளவு அதிகரித்து ஒரு குறிப்பிட்ட அளவை கடந்ததும் செயல்பட தொடங்கும். அதற்கு மூன்று நாள் முதல் ஒரு வாரம் வரை மாத்திரைகளை பொறுத்து வேறுபடும். இவற்றை விட்டு விட்டு எடுத்தால் அந்த அளவுகள் சரிவர வராது. ஆகவே மருத்துவர் பரிந்துரைத்த காலம் தொடர்ந்து எடுக்கவும்.
8. எனக்கு தினமும் மாத்திரை எடுக்க கடினமாக உள்ளது. வேறு வழி உண்டா?
சில மாத்திரைகளுக்கு மாற்றாக மாதம் ஒரு முறை போடும் ஊசிகள் உண்டு... ஆனால் பல மாத்திரைகள் தினம் உட்கொள்ளும் வகைதான்.
9. மாத்திரையை சட்டென்று நிறுத்தினால் பிரச்சினை வருமா?
மாத்திரையை அவ்வாறு நிறுத்துதல் நல்லதல்ல... மாத்திரையை பொறுத்து , அது எத்தனை காலம், என்ன டோஸில் எடுக்கப்பட்டது என்பதை பொறுத்து தொந்திரவுகள் ஏற்படலாம். ஆகவே நிறுத்துவதென்றால் உங்களின் மருத்துவரை கலந்தாலோசித்து படிப்படியாக நிறுத்துவதே நலம்.
இறுதியாக மனநல மருந்துகளும் மற்ற மருந்துகளை போலத்தான். அவற்றை எடுக்கும் போது வரும் தொந்திரவுகளை பற்றி உங்களின் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். மருந்துகளில் பல்வேறு வகைகள் உள்ளன. உங்களுக்கு ஒத்துவர கூடிய மருந்துகளை தேர்ந்து எடுக்க உங்களுக்கு அவர் உதவுவார்.
வணக்கம்.
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி...
Deleteமனநல மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்
ReplyDelete