வணக்கம்!
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மனம் திறந்து... மனநலம் பற்றி நிறைய பதிவுகள் பத்திரிக்கை குறிப்புகள் இப்பொழுது வருகின்றன. அவற்றில் சில தற்குறிகள் தரும் விவரங்களைப் படித்து விட்டு கடுப்பாகி ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதன் பின் எப்படி எதை சொல்லுவது என்று மிகவும் குழம்பிப் போய் பேசாமல் ஒரு பதிவுடன் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நண்பர்கள் காட்டிய உற்சாகமும் ஆதரவும் இன்று மீண்டும் என்னை பதிவிட வைத்துள்ளது. இனி முடிந்தளவுக்கு வாரம் ஒரு முறையாவது பதிவிட வேண்டுமென்று உத்தேசித்துள்ளேன். இந்த வார பதிவுகளில் ஒரு அடிப்படைக்கேள்வியை பார்ப்போம்....
மனநோய்கள் ஏன் வருகின்றன???....
மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்....
"ஏதோ வேலைப்பாடு பண்ணிட்டாங்க"
"எல்லாம் Stress தான்""Society மாறிடுச்சுல அதான் பிரச்சனை"
"மூளையில ஏதோ பிராப்ளம்... Exacta காரணம் தெரியலை..."
இவையெல்லாம் மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்கள். ஒவ்வொருவரின் படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பதில்கள் வந்தாலும் உண்மையான பதில் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே...
மன நோய் ஏன் ஏற்படுகிறது... ஒரே குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மன நோய் ஏற்படுவதையும் மற்றொருவருக்கு ஏற்படாமல் இருப்பதையும் தீர்மானிப்பது எது?... 50 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்றைய அறிவியல் இந்த கேள்விகளுக்கு சற்றேறக்குறைய தெளிவான பதில்களை வைத்துள்ளது. இந்த பதிவில் அறிவியல் ரீதியான விளக்கங்களை முடிந்தளவுக்கு டெக்னிகல் வார்த்தைகளை தவிர்த்து தர முயற்சிக்கின்றேன்.
ஆதி காலம் தொட்டு இருந்து வரும் ஒரு கேள்வி மனம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? உடம்பிலா... அல்லது அரூபமாய் வேறு எங்காவதா? முதலில் தத்துவரீதியான விவாதமாய் இது இருந்த போது Rene Descartes என்ற அறிஞர் மனம் வேறு உடல் வேறு... என்றார். அந்த நம்பிக்கை 60 வருடங்களுக்கு முன் வரைக் கூட இருந்தது. பிராய்டு காலத்தில் எல்லாம் மனப்பிரச்சனைகள் வரக்காரணம் மூளையில் இருக்கலாம் என்றாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். காரணமில்லாமல் இல்லை.CT, MRI போன்ற வசதிகள் இல்லாத அந்த காலத்தில் மன நோய் கொண்டவரின் மூளையை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பெரிதாய் ஒரு மாற்றமும் தெரியவில்லை. மாரடைப்பு, பக்க வாதம் என்று எல்லா நோய்களும் அது தாக்கும் உறுப்பை பாதிக்கின்றன. அது போல் வெளிப்புற தோற்றத்தில் (Morphology) எதுவும் தெரியாத போது எப்படி மனம் மூளையில் உள்ளது என்றால் ஒப்புக்கொள்ள முடியும்???? 1950களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது.
1952 - உலகில் முதல் முறையாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் மன நோய்க்கு ஒரு மருந்தை கண்டுப்பிடித்தனர். அதன் பெயர் - Chlorpromazine. அதற்கு முன்னும் பல மருந்துகள் இருந்தாலும் இதன் வித்தியாசம் என்னவென்றால் முழுவதும் சுயத்தை இழந்து சமூகத்துக்கும் தனக்குமே பாரமாய் வாழ்ந்து வந்த பல தீவிர மன நோயாளிகளைக் கூட இது குணப்படுத்த ஆரம்பித்தது. அது மருத்துவ உலகில் ஒரு புயலை கிளப்ப ஆரம்பித்தது. மன நல மருத்துவம் ஒரு புதிய பாதையில் காலடி எடுத்து வைத்தது.
எப்படி இந்த மருந்து வேளை செய்கிறது என்று ஆராய்ந்ததில் விஞ்ஞானிகள் ஒன்றை கண்டுப்பிடித்தனர். டோபமின் (Dopamine) என்ற மூளையின் ரசாயனம் இந்த மருந்தினால் மாற்றமடைவது தெரிய வந்தது. அத்துடன் ஒரு கேள்வி எழ ஆரம்பித்தது. - மனநோய் வர ஒரு உடல் மாற்றம் காரணமாக இருக்குமென்றால் அதற்கு முன் அளிக்கப்பட்டிருந்த உளவியல் விளக்கங்கள் எல்லாம் உடான்சா.... உடான்ஸ்தான் என்றொரு சாரார் தர்க்கம் செய்து முழுமையாக உளவியல் விளக்கங்களை நிராகரித்தனர். மற்றொரு பக்கமோ உளவியல் வல்லுனர்கள் காலத்தால் நிரூபிக்கப்பட்டு வந்த விளக்கங்கள் என்று சொல்லி சில விளக்கங்களை கை விட மறுத்தனர். இருக்கிற குழப்பம் போதாதென்று மற்றுமொரு தரப்பு விஞ்ஞானிகள் புதிதாய் ஒரு காரணியை கொண்டு வந்தனர் - சமூகம். மனிதன் தனித்தீவில்லை. அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அவன் செயல்களைப் பாதிக்கிறது. அதுவும் அவனுக்கு மனநோய் வரக்காரணம் என்பது அவர்கள் argument. ஒவ்வொரு தரப்பும் அதன் வாதத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்க, அதன் முடிவில் George Engel என்ற விஞ்ஞானி ஒரு பாப்பையாத்தனமான ஒரு தீர்ப்பைக் கூறினார்.
“அட! மூணுமே காரணம்தான்யா!!!”
அதற்கு அவர் தந்த பெயர் – Biopsychosocial theory…
Biological – ஒரு நோய் வரக்காரணமாக இருக்கும் உடலியல் மாற்றங்கள். நரம்புகளின் தொகுப்பே மூளை. அதன் இயக்கமே மனம். இயக்கம் என்று நான் குறிப்பிடுவதில் தான் சூட்சுமம் உள்ளது. மூளை எவ்வாறு இயங்குகிறது. நம் மூளையின் நரம்புகள் ஒன்றோடொன்று தொடர்புக்கொள்ள சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றன. Neurotransmitter எனப்படும் அந்த ரசாயனங்கள் ஒரு நரம்பிலிருந்து மற்றொன்றுக்கு செய்தி எடுத்துச்செல்கின்றன. அவற்றின் அளவில் கூடவோ குறையவோ மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவே மனநோய் ஏற்படுகிறது. எந்த ஒரு மன நோய்க்கும் இதுவே அடிப்படை. ஆனால் சில நோய்களில் இது மட்டுமேயன்றி வேறு சில காரணிகளும் இருக்கின்றன.
Psychological – மனநோய் ஏற்படக் காரணம் நரம்பியல் மாற்றங்கள் என்றால் அவை வெளிப்படுவதில் உளவியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மனஅழுத்தம்(Depression) ஏற்பட Serotonin என்ற ரசாயனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன் குறைவினால் ஏற்படும் வருத்தம், நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த உணர்ச்சிகளோடு தன்னை, உலகை, எதிர்க்காலத்தை அவர்கள் மதிப்பிடும்போது அவை மேலும் அந்த உணர்வுகளை அதிகரிக்க செய்து ஒரு மீள முடியாத சுழற்சியில் தள்ளிவிடுகின்றன. இது போல் சில நோய்களில் உளவியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன
Social – சமுகம் எனும்போது நாடு, இனம் என்று மட்டுமே அர்த்தம கொள்ளக்கூடாது. நம் நண்பர்கள், சொந்தங்கள் ஏன் குடும்ப உறுப்பினர்கள் கூட நம்மை சுற்றியிருக்கும் சமூகம் தான். மனநோய் வந்தவர்களை வெறுத்து ஒதுக்குவது மட்டுமில்லை, அதீதமாய் அவர்களை கவனிப்பதும் அவர்களின் இயல்பான ஒவ்வொரு செய்கைகளுக்கும் அர்த்தம் கற்பித்து பார்ப்பதும் கூட மனநோயை அதிகரிக்கச் செய்யும்.
இந்த Biopsychosocial model மனநோய் என்றில்லை எந்த ஒரு வியாதிக்கும் உண்டு. ஆனால் மனநல மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் இன்னும் சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மனநோயால் பாதிக்கப்படுகிறார். மற்றொருவர் மனநோய் வர எல்லா காரணங்கள் இருந்தும் பாதிக்கப்படுவதில்லை... ஏன்???....
அடுத்தப் பதிவில் பார்ப்போம்....
என்றும் உங்கள் நலம் விரும்பும்
மரு.ஆவுடையப்பன் M.D.,(Psychiatry)
very useful contribution
ReplyDeleteநன்றி...
Deletenice sir
ReplyDeleteUse full information doctors Thanks to you
ReplyDeletedear Doctor, Very very useful information
ReplyDelete