இந்த முன்னுரை எழுதியது தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். யார்? என்ன புத்தகம் என்று சொல்லும் முன் இதை படித்துவிட்டு வாருங்கள்.
விஷயம் இதுதான்: நாம் எப்போதேனும் இப்படி எல்லாம் இருக்கிறோம். அவர்கள் எப்பொழுதுமே இப்படி இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்; நாம் வெளியே இருக்கின்றோம்.இந்த பைத்தியக்கார உலகத்தில் பல பைத்தியக்கார விடுதிகளும் இருக்கின்றன. ஒருமுறை அவற்றில் பலவற்றுக்கு நான் விஜயம் செய்தேன். என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? என்னவோ ஒரு பைத்தியக்காரத்தனம். பைத்தியங்களுக்கு அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் அந்த காரணம், நடைமுறை உலகத்தின் கண்களுக்குப் புரிவதில்லை; பொருந்துவதுமில்லை. எனவே அவர்களை ஏதோ ஒரு பெயரைச் சூட்டி நாம் ஒதுக்கி வைத்து விடுகிறோம்.பைத்தியம் என்றுபெயர்சூட்டப்பட்டவர்களை மட்டுமே நம்மால் ஒதுக்கிவைக்க முடிகிறது. ஆனால் பைத்தியக்காரதனத்தையே நம்மால் ஒதுக்கி வைத்து விட முடிகிறதா? பிறருக்குத் தெரியாத, தெரிந்து விடுமோ என்று நாம் அஞ்சுகிற,தெரிந்து விடக்கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒரு வேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொரிந்து கொள்கிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கின்றன! இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரதனங்கள் வெளியே தெரிந்து விட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்தது கூடச் சரி –என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?ஒரு மன நோயாளி பூரணமாய்க் குணம் பெற்றுவிட்ட பின்னும் கூட இந்த உலகம் அவரைத் தொடர்ந்து சந்தேகிக்கிறது; கேலி பேசுகிறது;தனிமையில் அவரிடம் சிக்க அஞ்சுகிறது. ஒரு குழந்தையை அவர் கொஞ்சினால் அந்தக் குழந்தைக்கு என்ன நேருமோ என்று உள்ளம் பதைக்கிறது; அவரோடு ஓர் அறையில் தனித்திருக்க அவர் மனைவியே அஞ்சுகிறாள்.இப்படிப்பட்ட செய்கையினால் இந்த உலகம் மீண்டும் அவரை அந்த விடுதிக்கே திருப்பி அனுப்பி விடுகிறது.உலகத்தின் அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தைத் தரிசித்து விட்டுத் திரும்பி வந்த சிலரையும் நான் அங்கே சந்தித்தேன். உலகம் அவர்களைக் கண்டு அஞ்சுவதைப் போலவே, அவர்களும் இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.அவர்கள் உலகத்தைவிட இது பெரிய உலகமல்லவா? அதாவது, பெயர் சூட்டப்பட்ட அந்த பைத்தியக்கார விடுதியைவிட, பெயர் சூட்டப்படாத இந்த உலகம் பெரிய பைத்தியக்கார விடுதியல்லவா? எனவே நமக்கு அஞ்சி அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.அவர்களின் உள் உலகம் மிகவும் ஆனந்தமயமாய் இருக்கிறது போலும்! அந்த லயிப்பில்தான் அவர்கள் புற உலகத்தையும் உங்களையும் என்னையும்- மறந்து செயல்படுகிறார்கள்.மனிதர்கள் செய்யாத எதையும் அவர்கள் செய்துவிடவில்லை. அவர்கள் அழுகிறார்கள், சிரிக்கிறார்கள், பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பேசுகிறார்கள், அன்பு செய்கிறார்கள், நன்றி காட்டுகிறார்கள். நாம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர்களும் செய்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் பைத்தியக்காரர்கள்!அந்தக் கோடு எங்கே கிழிக்கப்பட்டது?சற்று நேரத்துக்கு முன் உங்களது தனியறையில் உடை மாற்றிக் கொண்டபோது நீங்களும் நிர்வாணமாய் நின்றிருந்தீர்கள், நினைவிருக்கிறதா? அதுபோல் அவர்கள் தங்கள் தனி உலகத்தில் அவ்வாறு நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!ஒரு மெல்லிய ஸ்க்ரீன் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு கோடு கிழித்திருக்கிறதே!அன்றொரு நாள் அளவுக்கு மீறிய கோபத்தில் கையிலிருந்த பாத்திரத்தை வீசி எறிந்து உடைத்தீர்களே, நினைவிருக்கிறதா? அதற்கு ஆயிரம்தான் காரணம் இருக்கட்டும்.அந்தச் செய்கையை நீங்கள் நியாயப்படுத்த முடியுமா? அதைப்போல அவர்களும் சில சமையங்களில் செய்ததும் உண்டாம். ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!நான் பாடிக் கொண்டிருக்கிறேன். எனது பாடலைக் கேட்க ஒருவருமே இல்லையென்று எனக்குத் தெரியும். அந்தத் தனிமையில் தொண்டையைக் கிழித்துக்கொண்டு, என் செவிக்கு இது இனிமையாக இருப்பதால் என்னை மறந்த உற்சாகத்தில் நான் பாடிக் கொண்டிருக்கிறேன்.நான் கேட்கிறேன்: இதற்கு என்ன பெயர்? அதே போல் அவர்களும் தங்கள் தங்கள் உற்சாகம் கருதிப் பாடுகிறார்கள். அதே மாதிரியே சில சமயங்களில் அதே மாதிரி உற்சாகமான லயிப்புடன் அவர்கள் அந்தத் தனிமையில் அந்தரங்கமாக தம்முடன் பேசுகிறார்கள்! ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!அளவுக்கு மீறிய சந்தோஷத்தினால், அல்லது துயரத்தினால் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிப் படுக்கை கொள்ளாமல் பெருமூச்செறிந்து கொண்டே, மனம் சிலிர்த்து சூரியோதயம் வரை நீங்கள் விழித்துக் கொண்டிருக்கவில்லையா?அதைப் போல் அவர்களும் இருப்பதுண்டு. ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!
இந்த ‘எப்போதோ’வும், இந்த ‘எப்போதுமே’வுந் தான் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி விட்டன!இதன் அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், நமது காரியங்களுக்கான காரணத்தை நாம் நியாயப்படுத்த முடிகிறது. அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை; அதாவது அவர்கள் நியாயம் நமக்குப் பிடிபடுவதில்லை.அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகமாக இருக்கிறார்கள்; தனி உலகமாக இயங்குகிறார்கள்.நாம் எவ்வளவுதான் தனிப்பட்ட முறையில் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் ஒரு பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு விடுகிறோம். அவர்களுக்குப் பொதுவான நியாயம் என்று ஒன்று இல்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்குள்ளையே மாறுபட்ட தனித்தனி நியாயத்தின் அடிப்படையில் தனித்தனியே இயங்குகிறார்கள். எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.
கண்டுப்பிடித்தீர்களா?
தெரியாதவர்களுக்கு....
இதை எழுதியவர் ஜெயகாந்தன்.
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற புத்தகத்தின் முன்னுரை இது. ஜெயகாந்தனுக்கு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால் இது எழுதப்பட்டது 43 ஆண்டுகள் முன்பு எனும்போது அவரின் தீர்க்க சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இது எழுதி 43 வருடங்கள் ஆகியும் இதில் குறிப்பிட்ட வரிகள் உண்மையாய் இருப்பது மனநலம் பற்றிய விழிப்புணர்வில் எந்தளவுக்கு நாம் பின்தங்கியுள்ளோம் என்று தெரிகிறது.
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற புத்தகத்தின் முன்னுரை இது. ஜெயகாந்தனுக்கு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால் இது எழுதப்பட்டது 43 ஆண்டுகள் முன்பு எனும்போது அவரின் தீர்க்க சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இது எழுதி 43 வருடங்கள் ஆகியும் இதில் குறிப்பிட்ட வரிகள் உண்மையாய் இருப்பது மனநலம் பற்றிய விழிப்புணர்வில் எந்தளவுக்கு நாம் பின்தங்கியுள்ளோம் என்று தெரிகிறது.
வேறொரு இடத்தில் உடம்புக்கு காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், அஜீரணம் என்றெல்லாம் வருகிற மாதிரி மனத்துக்கும் நோய்கள் ஏற்படுவது உண்டு. அவைதாம் பயம், கோபம், சந்தேகம், கவலை என்பன. உடலுக்கு நோய் தருகிற கிருமிகள் நம்மைச் சுற்றிலும் நிறைய உண்டு. நம் உடலிலே கூட அவை இருக்கின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற திறன் நம்மிடம் பலமாக இருக்கிறவரை அவற்றால் நாம் பாதிக்கப்படுவதில்லை. அதே போன்று கோபம், சந்தேகம், பீதி,வெறுப்பு முதலிய இயல்புகளினால் நாம் பாதிக்கப்படாமலிருக்கிற அறிவு(reasoning) பலமாக இருக்கிறவரை நம்முடைய மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. உடம்பு மாதிரியே மனம் சம்பந்தப்பட்ட கூறுகளிலும் ஆரோக்கிய மனமும், எப்போதோ சில சமயம் பாதிக்கப்படுகிற மனமும், அடிக்கடி பாதிக்கப்படுகிற மனமும், அடிக்கடிப் பலமாகப் பாதிக்கப்பட்டு வைத்திய உதவியுடன் தேறுகிற உடல் போன்ற மனங்களும், நிரந்தரமாகவே, தீர்க்க முடியாத அளவுக்கு நோயில் விழுந்துவிடுகிற மன நோய்களும் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். மன நோய்கள் நிரந்திரமா? மனநல மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பது போன்று இன்றளவும் உள்ள கேள்விகளுக்கு இதை விட தெளிவாக ஒரு மனிதனால் விளக்க முடியாது.
இந்த நூல் ஒரு மூன்று கட்டுரை தொடர்களின் தொகுப்பு. வெறும் 150 பக்கங்களுக்குள் தான் இருக்கிறது. மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளார்கள். ஐம்பது ரூபாய்தான். வாங்கி படியுங்கள். நம் வாழ்வின் எல்லைகளுக்குள் வராத வந்தும் தினசரி நிகழ்வாய் ஒதுக்கப்பட்ட மனிதர்களை சந்திப்பீர்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........