Wednesday, November 14, 2012

சர்க்கரை நோயாளிகள் இனிப்பை விரும்புவது ஏன்?...

Stress பற்றிய என் பதிவுத்தொடர் தனியாக தொடரும்... அதில் நிறைய பேச இருப்பதால் அவ்வப்போது மற்ற சில விசயங்களைப் பற்றி தனியாகப் பதிவிடுகிறேன்... இன்று சர்க்கரை நோயாளிகள் தினம்... அவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினை ஒன்றை இன்றுப் பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒரு வயதானவர் வந்திருந்தார். மிகத் தீவிர மனச்சோர்விலிருந்த அவரிடம் பேசும்போது மெல்ல அவரின் மன அழுத்தத்திற்கான ஆரம்ப நிகழ்வைக் கேட்டேன்... முதலில் தயங்கியவர் பின் "என்னை கேவலமாக நினைக்காதீர்கள்..." என்ற பீடிகையுடன் பேசத்தொடங்கினார். 

அவருக்கு சமீபத்தில்தான் சர்க்கரை நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். கண்டறிந்ததும் அவர் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி. உடனே 144 பாய்ந்தது. தனிச்சமையல்... இது நாள் வரை அவர் மிகவும் விரும்பிய அத்தனை உணவுக்கும் தடை... அதையும் மீறி அவர் ஏதாவது உணவை சாப்பிட்டால் உடனே அவரை ஒரு மாறி பார்ப்பது... "வாயை கட்டுங்க..." போன்ற கமெண்ட்கள்... கொஞ்ச காலம் கழித்து அவரின் உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்திருக்கிறது. வீட்டில் எந்த உணவுப்பொருள் வைத்தாலும் உடனே மாயமாகியிருக்கிறது. அதை தெரிந்து அவர் மனைவி கண்டிக்க சண்டைகள் சச்சரவுகள். சிறிது சிறிதாக அவர் மன நிம்மதி இழக்கத் தொடங்கினார். அதன் விளைவாக அவரின் உணவுப்பழக்கத்தைப் பற்றிய குற்ற உணர்ச்சி.... தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற தன்னிரக்கம்... என்றுப் பிரச்சினை வளர்ந்து இறுதியாக தீவிர மன அழுத்தத்துடன் என்னிடம் வந்துள்ளார். இது தெரிந்ததும் அவரின் மனைவியிடம் "ஏம்மா...ஷுகர் அளவு அவருக்கு எப்பவாவது கூடியிருக்கா?" என்றுக் கேட்டேன். "இல்லை சார்... கூடியிருமோன்னு ஒரு பயம்தான்" என்றார்.

இதுதான் பிரச்சினை. நம் சமுதாயத்தில் உணவுக்கட்டுப்பாடு என்பது உணவுகளைத் தவிர்ப்பதென்று ஒரு நம்பிக்கை உலாவுகிறது. நான் மேலே சொன்னது ஒரு Extreme உதாரணம்.  ஆனால் வீட்டில் ஒரு சர்க்கரை நோயாளியோ ரத்தக்கொதிப்பு வந்தவரோ உள்ளவர்கள் அவர்கள் சாப்பாட்டை கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிவார்கள். பல சமயம் ஏன் இந்தளவுக்கு அவர்கள் தவிர்க்க வேண்டியப் பொருட்களை நாடுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. இந்தப்பதிவில் சர்க்கரை நோயாளிகளின் இந்தப் பழக்கத்திற்கான உளவியல் காரணங்கள் மற்றும் அதைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளை பற்றி விளக்குகிறேன்.

முதலில் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமா? ஏன்? என்பதைப்பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். இளம் வயதிலேயே வருவது Type 1. நமக்கு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் மரபியல் ரீதியாக அழிக்கப்படுவதினால் வருவது. இது நம் சமுதாயத்தில் சற்றே குறைவு. ஆனால் நம்மில் பலருக்கு வயதானப்பின் வருவது இரண்டாம் வகை. (Type 2). இதில் இன்சுலின் சுரக்கிறது ஆனால் அது செயல்பட வேண்டிய இடங்களில் அதனால் முழுமையாக செயல்பட முடியவில்லை. எந்த வகையானாலும் அடிப்படைப் பிரச்சினை - "இன்சுலின் இல்லை".

இந்த இன்சுலினின் வேலை நம் திசுக்களுக்குத் தேவையான சக்தியை அதனுள்  செலுத்துவது... சக்தி என்றால் நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் (நாம் வழக்கமாக சொல்லும் ஷுகர்)... இன்சுலின்  இல்லாத போது இந்த சுகர் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் இரண்டு... சக்தி கிடைக்க வேண்டிய திசுக்கள் இன்னும் அதே நிலையிலேயே இருக்கின்றன... அதீதமாக இருக்கும் இந்த ஷுகர் தேவையில்லாத இடங்களில் குறிப்பாக ரத்த நாளங்களில் படிந்து சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்நலம் கெட்டுப் போகக் காரணமாகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் உணவு உட்கொண்டும் திசுயளவில் பட்டினி கிடப்பதுப்போல் இருக்கின்றனர்.   ஆகையால் இவர்கள் மேலும் மேலும் உணவு உட்கொள்ள அது மேலும் ஷுகர் அளவையே அதிகரிக்கறது. ஆகவே இவர்களுக்கு உணவில் கார்போஹைட்ரேட் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் அந்த வியாதி வரும் முன் கடைப்பிடித்த உணவுப்பழக்கங்களை அப்படியே மேற்கொள்ள விரும்புகிறார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை தட்டிக்கழிக்கின்றனர். உணவில் மாற்றம் கொண்டு வருவதை எதிர்க்கிறார்கள். குழந்தைகள் போல் அடம் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். அதையும் மீறி தடுத்தால் யாரும் பார்க்காத நேரம் கள்ளத்தனமாக இரண்டு இனிப்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு கமுக்கமாக உட்காந்திருப்பார்கள்.  ஏன் இந்த உணவு வெறி? இவர்களின் இந்த செயலுக்கு வெறும் திசுக்களில் சக்தி கிடைக்காததே காரணம் என்று நாம் முடிக்க முடியுமா? இதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்கள் என்ன?

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதென்று கண்டறிந்ததும் அவரின் மனநிலையில் ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த விழிப்புணர்வு யுகத்தில் நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் பற்றிய ஒரு அறிமுகம் உள்ளது. ஆகவே இந்த வியாதியின் சிக்கல்கள், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் அவர்களை பயமுறுத்துகிறது. கவலையடையச்செய்கிறது. இந்த உணர்வுகளைத் தவிர்க்க அவர்கள் மனதளவில் தங்கள் வியாதியையும் அதற்கு தேவையான மாற்றங்களையும் மறுக்க ஆரம்பிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக செய்கின்றனர். சிலர் மனதிற்குள் செய்கின்றனர்.இதனால் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை. யோசித்துப்பாருங்கள்... வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும் எத்தனை பேர் தொடர்ந்து போகின்றனர்?. கொஞ்ச நாட்கள் சென்று விட்டு அதை தவிர்ப்பதற்கான காரணங்களை புதிது புதிதாக கண்டுப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஏன்? மனதளவில் உள்ள அந்த மறுதலித்தல். எனக்குத்தான் பிரச்சினையே இல்லையே... இதை ஏன் நான் செய்ய வேண்டும் என்ற உள்மனதின் கேள்வி.

அதேப்போல் அடுத்து எழும் பிரச்சினை குடும்பத்தாரின் எதிர்வினைகள். நோயாளியை போல் அவரின் குடும்பத்தாரும் பயம், கவலை போன்ற உணர்வுகளுக்கு ஆளாகின்றனர்.  மேலும் இதுநாள் வரை நாம் சரியாக கவனிக்காமல்தான்  இது போல் வந்துவிட்டதோ என்ற குற்றயுணர்வும் சேர்ந்து கொள்கிறது. இத்தனை நாட்கள் விட்டதை சேர்த்துப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏற்கனவே மனதுக்குள் மறுதலித்தலில் இருக்கும் நோயாளிகளுக்கு அது ஒரு எதிர்மறை எண்ணத்தையே உண்டாக்குகிறது. கட்டுப்பாடுகளை மீற ஆரம்பிக்கின்றனர். அது அவர்களின் குடும்பத்தாரிடம் மேலும் பிரச்சினையே உண்டாக்க, இது ஒரு முடிவில்லா சுழற்சியாகின்றது.

இன்னும் சிலப் பேருக்கு மனக்கவலைகள், Stress போன்றவற்றை குறைக்க உணவை ஒரு ஊன்றுக்கோலாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்களுக்கு சற்றே சிறிது மன சஞ்சலம் வந்தாலும் உடனே உணவை நாடுவார்கள். உணவு இவர்களுக்கு ஒரு உற்சாகப்பானம்.

இன்னும் ஒரு சில பேர் இருப்பார்கள்.போக வர ஏதாவது எடுத்து வாயில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏன்? இதற்கு நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். பசி என்பது வேறு உணவில் திருப்தி என்பது வேறு. பசிக்கு சாப்பிட்டால் உடம்பில் ஹார்மோன்கள் சுரந்து அதன் பின் பசி எடுக்காது. ஆனால் உணவில் திருப்தி ஏற்படுவதென்பது நம் சுற்றுப்புறதிலிருக்கும் வேறு பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக பசியோடு ஒரு மதியம் ஹோட்டலுக்கு வருகிறீர்கள். புல் மீல்ஸ் சொல்லி சாப்பிட்டதும் உங்கள் பசி தீர்ந்து விடும். ஆனால் திருப்தி வருகிறதா? அந்த வாழைப்பழம், பீடா போட்டப்பின் ஏற்படும் உணர்வே உணவு  உண்ட திருப்தியை தருகிறது. அதே போல் உணவுக்குப்பின் உண்ணும இனிப்பு, நன்றாயிருக்கிறது என்று எக்ஸ்ட்ரா சாப்பிடும் உணவு, தட்டு நிறையவில்லை என்று போட்டுக்கொள்ளும் சாதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். இதை எதிர்க்கொள்ள என்ன செய்வது?

1. சர்க்கரை நோய் வந்ததும் ஒரு நல்ல உணவியல் நிபுணர் (Dietitian) ஆலோசனையைப் பெறுங்கள். முக்கியமாக உங்கள் உணவில் தற்பொழுது உள்ள சர்க்கரையின் அளவைக்கூட்ட கூடிய விஷயங்களை கண்டறியுங்கள். அதை தவிர்ப்பது எப்படியென்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள். ஆலோசித்து ஒரு மெனுவை தயார் செய்யுங்கள். அதை கடைப்பிடியுங்கள். டயட் என்றாலே விரும்பும் உணவுகளை புறக்கணிப்பதில்லை. அப்படி செய்தால் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அதை கடைபிடிக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. டயட் கடினம் ஆவது விரும்பிய உணவை புறக்கணிக்கும் போது தான். அதை விட சத்தான உணவிற்கு மாறுங்கள். விரைவில் அதை ரசிக்க தொடங்கி விடுவீர்கள்.

2. உங்கள் குடும்பத்தாருக்கு வரும் வியாதிகளுக்கு நீங்கள் காரணமாக முடியாது என்பதை உணருங்கள். அதீத கட்டுப்பாடும் அவர்களை குறை சொல்லுவதும்  எந்த பயனையும் தரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு உறுதுணையாய் இருங்கள். Diet Holidays கடைபிடியுங்கள். அதாவது நோய் வந்தவர்கள்  க்ளுகோஸ் குறிப்பிட்ட அளவு வர செய்தால் அவர்களுக்கு அன்றைக்கு டயட்டிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பிய உணவுகளை சமைத்து தாருங்கள். அவர்கள் டயட் கடைபிடிக்காமல் விட்டால் அவர்களை குறைக்கூறாமல் அதற்கான காரணத்தை கண்டறிய முற்படுங்கள். உற்சாகமும் தட்டிகொடுத்தலும் சில சமயம் சினிமாத்தனமாக தோன்றினாலும் நோய் வந்தவர்களுக்கு மிக முக்கியம்.

3. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க டயட் மட்டுமே வழியில்லை. உடற்பயிற்சியும் முக்கியம். உடற்பயிற்சி என்றால் செல் பேசிக்கொண்டே காலாற நடப்பதோ அல்லது நடந்த களைப்பு தீர ஒரு வடையும் டீயும் சாப்பிடுவதோ இல்லை. வேர்வை வர நடங்கள். ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை - எப்பொழுதும் சட்டைப்பையில் ஒரு பிஸ்கட் வைத்திருங்கள் சட்டென்று குறையும் குளுக்கோஸ் அளவை சமாளிக்க.

4. உங்கள் உணவு மேற்கொள்ளும் சூழலை கவனியுங்கள். தட்டின் அளவை குறையுங்கள். தேவையில்லாத நொறுக்கு தீனியை வாங்காதீர்கள்.

5. உங்கள் தீவிர முயற்சியையும் மீறி மீண்டும் மீண்டும் இனிப்பை நாடுகிறீர்களா? எந்தெந்த சந்தர்ப்பத்தில் அப்படி செய்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு டயரியில் குறித்து வைத்தால்  கூட நலம். அதை ஆராயும்போது உங்களுக்கே புலப்படும். உணவை நீங்கள் ஒரு மன அழுத்தம் குறைக்கும் கருவியாக பயன்ப்படுத்துக்கிறீர்களா என்று. ஒரு நல்ல சங்கீதம், ஒரு நல்ல புத்தகம், நண்பர்களிடம் பேச்சு இவை போதாதா? யோசியுங்கள்...

இறுதியாக சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனி உணவு தேவையில்லை. நாம் தினம் உண்ணும் உணவிலேயே சில மாற்றங்களை செய்துக்கொண்டால் போதும். 100 சதவிகிதம் உணவில்  கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டியது அவசியமில்லை. உணவின் மேல் அதீத ஆசை தோன்றுவது எல்லா  சர்க்கரை நோயாளிக்கும் வருவதுதான். அது அவர்களின் தவறில்லை. ஆகையால் குற்ற உணர்ச்சியோ தாழ்வு மனப்பான்மையோ கொள்ளாமல் இதை எதிர்க்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களால் முடியும்.

Sunday, November 11, 2012

அறிந்த வார்த்தை.... அறியாத அர்த்தங்கள்...


மின்சாரத்துடன் ஒரு கண்ணாமூச்சி ஆடி ஒரு வழியாக இந்தப் பதிவை வெளிக்கொண்டு வந்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சில நாட்களுக்கு முன் பாபு என்னைப் பார்க்க வந்தான். “உங்க அட்வைஸ் வேணும் மாமா...” என்றபடி.. “எதுக்குடா?” என்றேன். “ஒரே Stress ஆ இருக்கு. அம்மா படி படின்னு ஒரே டார்ச்சர்.” என்றான். பாபு வயது ஏழு. இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். 

Stress – இந்த தலைமுறையின் All purpose வார்த்தை. தலைவலியில் இருந்து தற்கொலை வரை அனைத்துக்கும் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? அதன் சரியான அர்த்தம் என்ன என்றால் பலர் ஒரு குழப்பமான பதிலே அளிக்கக்கூடும். அனைவரும் அறிந்த இந்த வார்த்தையின் அறியாத பல அர்த்தங்களை இந்த பதிவுத்தொடரில் பார்ப்போம்.


அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்....

சந்திரன் எழுந்தப்போது மணி எட்டு. க்ளையன்ட் மீட்டிங் ஒன்பது மணிக்கு. பரபரவென்று குளிக்க நுழைந்தால் தண்ணீர் வரவில்லை. அவசரத்தில் ஒரு காக்கை குளியல் போட்டுவிட்டு வெளியே வரும் போதே வேர்க்கத் துவங்கியது. பைக்கை முறுக்கி பாய்ந்து வரும்போது சிக்னல் அருகே ஆட்டோவில் லேசாக மோத ஆட்டோக்காரர் பஞ்சாயத்துக்கு வர சந்திரனுக்கு நேரமாகிறதே என்ற நினைப்போடு படபடப்பும் சேர்ந்துக்கொண்டது. ஒரு வழியாக சமாளித்து ஆபீஸ் அடைந்து டீம் லீடர் பார்த்து விடக்கூடாதே என்று பிரார்த்தனை செய்தபடி ஓடி சென்று சீட்டில் உட்காரும் போது தோழி “உன்னை கூப்பிடறாங்க” என்று ஒரு நக்கல் புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. மேனேஜர் அறைக்குச் சென்று கதவைத் தட்டும் போது தலை விண்விண்னென்று தெறிக்க ஆரம்பித்து விட்டது. கதவைத் திறந்ததும் “என்னவோ புயலாம்ப்பா... இன்னைக்கு க்ளையண்ட் மீட்டிங் கேன்சல்... அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...” என்றபடி அவரின் கம்ப்யூட்டரை விட்டு தலை எடுக்காமல் சொல்லி விட்டு வேளையில் முழ்கினார். சீட்டுக்கு திரும்பி வந்த சந்திரனுக்கு தலை வெடித்து விடுவது போல் வலிக்க சோர்வுடன் அரை நாள் வேலைப்பார்த்து விட்டு லீவ் சொல்லி விட்டு கிளம்பினான்.

இது ஒரு உதாரணம்தான். சந்திரனை போல் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு தடவை இது போல் நடந்திருக்கும். இங்கே சந்திரனின் தலைவலிக்குக் காரணம் Stress என்று நம்மில் யாராலும் சொல்ல முடியும். ஆனால் முக்கிய கேள்வி அதுவல்ல. அந்த Stress வரக் காரணம் என்ன? சந்திரனின் சோம்பேறித்தனமானப் பழக்கமா? இல்லை ஆட்டோக்காரருடன் நடந்த வாக்குவாதமா? இல்லை மீட்டிங்கை தவற விட்டால் என்னவாகுமோ என்ற கற்பனை பயமா? சுருக்கமாக சொல்வதென்றால் அந்த Stress அவனுள்ளிருந்து வந்ததா இல்லை வெளிக்காரணங்கள் உண்டாக்கியதா? 

அதேபோல் எழும் மற்றொரு கேள்வி, ஏன் மனதில் எழும் ஒரு பதட்டம் உடலியல் அறிகுறியாக வெளிப்படுகிறது? இரண்டுக்கும் இடையே என்ன தொடர்பு? சரி சந்திரனுக்கு மட்டுமேன் இந்தளவுக்கு பதட்டம் வர வேண்டும்? இதே போன்றதொரு சூழலில் மாட்டிக்கொண்ட எல்லோருமே அவனைப்போல் தான் உணர்வார்களா? ஒரே சூழல் ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான உணர்வை தோற்றுவிப்பது எதனால்?

வரவிருக்கும் வாரங்களில் இந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடையறிவோம்.

Stress – அவசரயுகத்தின் பின்விளைவா???...

பட்டிமன்றத் தலைப்பைப்போல் தோன்றினாலும் பலர் இந்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்த உடனே சொல்வது “எங்க காலத்துலலாம் இப்படில்லாம் கிடையாது சார்... இந்த காலத்துப்பசங்க சரி இல்லை...” என்பதுதான். அது உண்மையா என்று நாம் உறுதி பண்ணிக்கொள்ள முடியாத தைரியத்தில் பேசுகிறார்களோ என்று கூட சில சமயம் தோன்றும்.

இந்த சமுதாயத்திற்கு மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவா? அதிகமில்லை... ஒரு ஐம்பது வருடங்கள் பின் நோக்கி சென்றால் கூட பஞ்சமும் பட்டினியும் தினப்படி கதைகளாயிருந்தன. நம்மால் நமக்குத் தேவையான உணவைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் இறக்குமதி செய்துக்கொண்டிருந்தோம். அதை விடவா இப்பொழுது மோசமான நிலைமையிலிருக்கிறோம்? குடும்பங்கள் சிதறி விட்டன. ஒவ்வொருவரும் தனித்தீவாகி விட்டோம் என்பது உண்மையென்றாலும் மனித உணர்ச்சிகளில் ஆதாரமாக உள்ள பாசம், நட்பு மறைந்து விடவில்லையே!!! ஒவ்வொரு தலைமுறைகளும் தமக்கேயுரிய பிரச்சினைகளை சந்தித்து தீர்வு கண்டு வருகின்றன. ஆகையாலே இந்த தலைமுறைக்கு மட்டுமே இந்த அழுத்தம் இருக்கின்றது என்ற வாதமே கேள்விக்குரியது. அப்படியென்றால் வித்தியாசம் ஏற்படுத்துவது எது? Stress என்ற இந்த வார்த்தையின் அறிமுகம்தான். பழங்காலத்திலேயே நமக்கு நோய்களுக்கும் மனதைப் பாதிக்கும் சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை தெரிந்தாலும் அதை ஒரு விஞ்ஞானப்பூர்வமான விளக்கத்தின் மூலம் புரிந்துக்கொள்ள முயற்சித்தது போன நூற்றாண்டில்தான்.

Stress என்ற வார்த்தையைப் புழக்கத்தில் விட்டது Hans seyle என்ற விஞ்ஞானி. இயற்பியலில் இருந்து இந்த வார்த்தையைக் கடன் வாங்கி அவர் பிரயோகித்தார். இதன் மூலம் அவர் சொன்னது எதை? 

மனதிற்கு அழுத்தம் தரும் எந்த ஒரு உணர்வையும் அவர் Stress என்று குறிப்பிட்டார். அவரின் பின் வந்தவர்கள் பல்வேறு விதங்களில் அதை திருத்த முயற்சித்தும் அதுவே நிலைத்தது.

அழுத்தம் தரும் உணர்வு என்ற வார்த்தையை உபயோகிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அழுத்தம் தரும் எல்லா உணர்வுகளுமே மோசமானவையா???...

அடுத்தப் பதிவில் இன்னும் சற்றே விரிவாகப் பார்ப்போம்...

Thursday, November 1, 2012

கவுன்சலிங் உண்மையில் என்ன ... 2

வணக்கம்...
சென்ற கவுன்சலிங் பதிவை தொடர்கிறேன்.சென்ற பதிவில் நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது எப்படியென்று சொல்வதாக முடித்திருந்தேன்... அதே போல் நிஜமாகவே கவுன்சலிங் என்ன பயன் தரும் என்ற கேள்வியையும் இந்த வாரம் பார்ப்போம்...

பல சமயம் நமக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படைகள் நமக்கு புரியாது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, நமக்கேதும் பிரச்சினையில்லை என்றும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்றும் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை  (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. இது  எல்லோராலும் முடியாது. தவறான ஆலோசனைகளால் நேர விரயமும் மன குழப்பங்களும் தான் மிஞ்சும். ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. கீழ்க்கண்ட விஷயங்களை ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம்...


1. உங்கள் பிரச்சனைகளை,உணர்வுகளை காது கொடுத்து கேட்கவேண்டும்.  இதற்கு Active Listening என்பார்கள்... அதாவது நீங்கள் உங்கள் பிரச்சினையை சொல்லி கொண்டிருக்க அவர் மதியம் சாப்பிட போகும் கோழி கறியை பற்றி யோசித்துக்கொண்டிருக்க கூடாது... உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும். எப்போடா gap கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது... அவசியப்பட்டால் உங்கள் பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டவற்றை உங்களிடம் சொல்ல வேண்டும்... உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ  உங்களை  உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது. இரவினில் வரும் டிவி சேனல் லேகிய வைத்தியர்கள்  இந்த ஜாதி... 

2. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனையை தவிர மற்றவற்றை தர மாட்டார். என் புத்தகம் வாங்கு என் DVD வாங்கு உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று சொல்பவரை கண்டால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.....

3. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக மன நல பிரச்சினைகளைப் பற்றிய அடிப்படை அறிவுடன் இருக்க வேண்டும். அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும். As early as possible... மருந்து சாப்பிட்டால் நீ ஒழிஞ்ச!!!... என்று சொல்லி சரியான சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது. 

4. உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும். உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். நீ எப்படி என்கிட்டே கேள்வி கேக்கலாம் என்று கோபப்பட கூடாது. 

5. உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது.

6. நீங்கள் Second Opinion வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.

இவை எல்லாம் ஒரு நல்ல கவுன்சலரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்க கூடிய அடிப்படை விஷயங்கள். சரி நல்ல கவுன்சலர் கிடைத்து விட்டார் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா... என்றால் அது பிரச்சினையை பொறுத்து. அப்படியென்றால் எந்தெந்தப் பிரச்சினைக்கு கவுன்சலிங் தரலாம்...

கவுன்சலிங் - எதற்கு உதவும்...

மனதை பாதிக்கும்  பிரச்சினைகள் எல்லாமே வியாதிகள் இல்லை. அவற்றுள் பல சாதாரண மனித வாழ்க்கை அனுபவங்கள். ஆனால் அதை எதிர் நோக்க முடியாதவர்களிடம் மனப்பாதிப்பை உண்டு செய்கின்றது. இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பல சமயங்களில் மன நல மருந்துகள் அவசியப்படாது. இவற்றுக்கு உளவியல் சிகிச்சை முறைகளே தேவைப்படும்.

உளவியல் சிகிச்சைகள் (Psychological Therapies அல்லது Psychotherapies) எனப்படுபவை வெவ்வேறு கோட்பாடுகளில் உருவானவை. இவற்றுக்கு ஒரு அடிப்படை கோட்பாடு இருக்கும்... இப்படித்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும்... நாம் பொதுவாக கவுன்சலிங் எடுத்துக்கோ என்று சொல்லும் போது இதுப்போன்ற உளவியல் சிகிச்சை முறைகளையே குறிப்பிடுகிறோம். கவுன்சலிங் என்பது ஒரு வகையான உளவியல் சிகிச்சை முறை மட்டுமே.

உண்மையில் கவுன்சலிங் என்பது ஒரு ஆலோசனை வழங்கலுக்கு மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முடிவெடுக்க உதவும். உங்கள் பிரச்சினைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும். ஆனால் பிரச்சினையை தீர்க்குமா என்றால் தீர்க்காது. உதாரணமாக விபத்தில் கால் முறிந்தவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு ஒரு ஊன்றுகோலும் தருவார்கள். அவரின் கால் குணமடைய உதவுவது அந்த கட்டா... இல்லை அவரின் கையில் உள்ள ஊன்றுகோலா... கவுன்சலிங்கும் அப்படி ஒரு ஊன்றுகோல்தான்.

அந்தந்த பிரச்சினைகளை பொறுத்தே கவுன்சலிங் அமைய வேண்டும். அதை எல்லாவற்றையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணியாக கருதக்கூடாது. நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல் எவ்வாறு மன நல மருந்துகள் உளவியல் பிரச்சனைக்கு அவசியமில்லையோ அதே போல் உளவியல் வைத்தியங்களும் மனோவியாதிகளை முழுமையாக தீர்க்காது. ஏனென்றால் மன வியாதிகள் உருவாவது மூளையின் ரசாயனக் கோளாறுகளால். So எது மனோ வியாதி எது உளவியல் பிரச்சினை என்று எப்படி இனம் பிரிப்பது?... நல்ல கவுன்சலர்கள் தாராளமாய் இதை கண்டுப்பிடித்து விடுவார்கள். ஆனால் ஒரு வேளை இதை இனம் காண முடியாத அல்லது இனம் கண்டும் உங்களை தேவையான நல்ல சிகிச்சை பரிந்துரைக்க விரும்பாத போலிகளாய் இருந்தால் அங்கே கவுன்சலிங் உதவாது. அதற்காகத்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் நல்ல கவுன்சலர்களின் தகுதிகளை குறிப்பிட்டிருந்தேன். When in doubt, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு விட்டு அணுகுங்கள்.


இறுதியாக எந்த சிகிச்சை முறை என்றாலும் அதன் வெற்றியை தீர்மானிப்பது ஒன்றுதான் - COMMITMENT - குணப்படுத்த வேண்டும் என்று டாக்டருக்கும் குணமாக வேண்டுமென்று நோயாளிக்கும். தீர்வு என்னவென்று டாக்டர் சொன்னாலும் அதை பின்பற்ற போவது நோயாளிதான். ஆகவே இது போன்ற மனநல சிகிச்சை முறைகளில் பயன் பெறுபவரின் பங்களிப்பும் மிக மிக முக்கியம். நம் மக்களிடையே தென்படும் easy & quick fix மனப்பான்மை இதற்கு உதவாது. இதை புரிந்துக்கொண்டு உங்கள் மனநல மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரம் நலம் பெறுவீர்கள்.

அடுத்த வாரம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி பார்ப்போம்.

நன்றி.