Wednesday, January 9, 2013

ஒரு முகாமும் சில சிந்தனைகளும்...


சென்ற வாரம் சொல்லிய முகாமின் அனுபவங்கள்....

எழுத்தின் வசீகரமே நாம் நினைத்துக்கொண்டு ஆரம்பிப்பதற்கும் எழுதி முடித்த பின் வருவதற்கும் உள்ள வித்தியாசம்தான். அது போன்ற ஒரு வசீகரமான அனுபவமாக இந்த முகாம் எனக்கு அமைந்தது. 7 நாட்கள், ஐநூற்றி சொச்சம் கிலோமீட்டர்கள், இருநூறை தொடும் ஆசிரியர்கள், அவர்களின் கதைகள், பிரச்சினைகள்... ஆஸ்பத்திரி, என்னை தேடி வரும் நோயாளிகள் என்ற வழக்கமான என் வாழ்க்கையில் இது ஒரு சமூக தரிசனமாய் இருந்தது.

இந்த பயணத்தில் நான் சந்தித்த முதல் சுவாரசியமான மனிதர் - விழுப்புரத்தின் முதன்மை கல்வி அதிகாரி திரு. முனுசாமி. விழுப்புரத்தில் நடந்த முதல் முகாமில் இவர் பேசியபோது இன்றைய தலைமுறை அதிகாரியின் பார்வை வெளிப்பட்டது. ஆசிரியர் மாணவர்கள் இடையே உள்ள பிணைப்பிற்கான இவரது அளவுகோல் அலாதியானது. ஒரு வகுப்பின் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெயர்களை முழுமையாக சொல்ல முடியும் என்றாலே அவருக்கு அந்த வகுப்பில் ஈடுபாடு என்ற கருத்து அவரின் அனுபவ உளவியல் அறிவை காட்டியது. Kudos to him...

முதல் முகாமுடன் வரவேற்புரை, சிறப்புரை போன்ற அரசு விழாக்களின் சம்பரதாயங்களை தலை முழுகி விட்டு அடுத்தடுத்த நாட்களில் நடந்த முகாம்களில் தலைமை ஆசிரியர்களுடன் நேரடியாக பேச ஆரம்பித்த போது பல குமுறல்கள் வெளிப்பட்டன. அதை பற்றி சொல்லும் முன் இன்றைய கல்வித்துறையில் நடப்பதை நாம் சற்றே புரிந்துக்கொள்ள வேண்டும்.  கல்வித்துறை இரண்டு விஷயங்களை மிகவும் வலியுறுத்துகிறது. ஒன்று எந்த பள்ளியாக இருந்தாலும் நூறு சதவிகிதம் தேர்ச்சி. இரண்டாவது நூறு சதவிகிதம் கல்வி அதாவது பள்ளிக்கு வந்த எந்த மாணவரும் கல்வியை நிறுத்த கூடாது. இந்த இரண்டு விஷயங்களே அவர்களின் தலையாய கவலையாக இருக்கிறது.

என் கையேட்டில் தேர்வில் தோல்வி என்பது தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாய் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பல ஆசிரியர்கள் அதை விட அவர்களின் நேரடி அனுபவத்தில் உணர்ந்த காரணமாய் குறிப்பிடுவது இனக்கவர்ச்சியைதான். அதை எப்படி கையாளுவது என்று இன்னும் ஒரு தெளிவு அவர்களுக்கு ஏற்படவில்லை. அதை நசுக்குவது அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது என்று அதீதமான நடவடிக்கைகளையே யோசிக்கின்றனர் . அதன் விளைவாக அந்த மாணவனோ மாணவியோ ஓடி போனாலோ தற்கொலை செய்து கொண்டாலோ என்ன செய்வது என்பதே அவர்களின் கவலையாக உள்ளது. அதை விட மிகவும் அதிர்ச்சி தந்தது "எது செஞ்சுகிட்டாலும் பரவாயில்லை. ஸ்கூல்ல பண்ணிட கூடாது" என்ற அவர்களின் கவலை. இந்த சிந்தனையை தொடர்ந்து கேட்டபோது பல நியாயமான காரணங்களை வெளியிட்டனர்.

"ஸ்கூல் பையன் இறந்தா அவங்க அப்பா அம்மா கேட்கற முதல் கேள்வி - வாத்தியார் ஏதும் செஞ்சுட்டிங்களா சார்?ன்னுதான். நாங்க அக்கறை எடுத்து ஒரு பையனையோ பெண்ணையோ கண்டிச்சா உடனே அவங்க ஏதும் பண்ணிக்கறாங்க. உடனே நாங்க எதுக்காக கண்டிச்சோம்ன்னு கேட்காம எங்கள அடிக்க வராங்க. அது விட மிக முக்கியமானது எங்கள் மேல துறை ரீதியா எடுக்கப்படற நடவடிக்கை. வீட்டு பிரச்சனைக்கு விஷம் குடிச்சுட்டு இங்க வந்து யாரும் இறந்தா கூட நாங்கதான் காரணமான்னு கேட்கறாங்க. இப்போல்லாம் எங்களுக்கு எந்த பாதுக்காப்பும் இல்லை. நல்ல விஷயம்னா கூட பசங்களை ஏதும் சொல்ல முடியலை. உடனே ஒப்பன்னா செத்து போயிடுவேன்னு மிரட்டுறாங்க. ஏன்டா வம்புன்னு இப்போல்லாம் கண்டிக்கறதே இல்லை."

முகாம் நடந்த ஒவ்வொரு தினமும் இந்த வார்த்தைகளை கேட்டேன். ஒரு வகையில் அவர்களின் நிலையை புரிந்துக்கொள்ள முடிந்தது. அடிப்பது,திட்டுவது தவறென்று மட்டும் சொல்லும் இந்த சமுதாயம் அவர்களுக்கு தவறு செய்யும் மாணவனை எதிர்க்கொள்வது எப்படி என்று சொல்லுவதில்லை. அதில் பத்திரிகைகளுக்கு அக்கறையுமில்லை. நமக்கு ஒரு பிரச்சனையின் முழுமையும் பார்க்க நேரமோ விருப்பமோ இல்லை. ஆகையால் பலியாடுகள் தேவைப்படுகின்றன.



அதே போல் ஆசிரியர்களுக்கு மாணவர் தற்கொலையோ தற்கொலை முயற்சியையோ தொடர்ந்து செயல்படுவது எப்படி என்ற வழிகாட்டு முறைகள் இல்லை. அவர்கள் அதன் பின் மற்ற மாணவர்களிடையே வரும் உளவியல் சிக்கல்களை தீர்ப்பது பற்றியும் என்ன செய்வதென்று ஒரு தெளிவில்லாமல் இருக்கின்றனர்.

அதை விட ஆசிரியர் மாணவர் இடையிலான உறவை மிகவும் சோதிப்பது - ஆசிரியர்கள் மேல் திணிக்கப்படும் கட்டாயங்கள். நூறு சதவிகிதம் தேர்ச்சி என்பதை அடையாதது ஒரு கொலை குற்றமாகவே கருதப்படுகிறது. மாணவர் தேர்ச்சி ஒரு ஆசிரியரின் பணி என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அது ஆசிரியரின் பணி மட்டுமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாணவனுக்கு பள்ளி பிடிக்காமல் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்றே ஆசிரியரின் அணுகுமுறை. இன்றைய கல்விச்சூழலில் மாணவர்களுக்கு படிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது. நல்ல ஆசிரியர் இருந்தாலும் வீடுகளில் உள்ள நிலைமையும் நண்பர்களின் வழிக்காட்டுதலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்படி இருக்க நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமே அளவுகோலாக கொள்வது எப்படி சரியாகும்? ஒரு தலைமையாசிரியர் கேட்டார் - "நாங்க என்ன பாக்டரியா சார் நடத்துறோம்? மாணவனை உள்ளே போட்டு மார்க்கா மாத்தி கொடுக்கறதுக்கு?". இந்த கண்மூடித்தனமான மதிப்பெண் வழிபாடு சாதிப்பதென்ன? விளையாட்டு, கலை என்று எந்த ஒரு மன வளப்படுத்தும் விஷயங்களும் இல்லை. என்ன வகையில் நமக்கு உதவ போகிறது என்று தெரியாத ஒரு படிப்பு. அதிகாரிகள் ஆசிரியர்களை இடிக்க ஆசிரியர்கள் மாணவர்களை இடிக்கிறார்கள். இறுதியில் விளைவதென்னவோ ஆசிரியர் மாணவர்கள் பிரிவுதான்.

மற்றுமொரு குமுறல் வெளிப்பட்டது - வெளிப்பிரச்சனையில் மாணவன் தற்கொலை செய்துக்கொண்டாலும் அது பள்ளியில் நடந்தால் ஆசிரியர் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதே. எல்லாம் சேர்ந்து இன்றைய பொழுது ஒழுங்காய் கழிந்தால் போதுமென்ற எண்ணமே ஆசிரியர்களிடம் உள்ளது. இது ஒரு அபாயகரமான போக்கு. மாணவன் ஆசிரியர் உறவென்பதை கற்றல் - கற்பித்தல் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டால் வெளியே வருவது செம்மறியாட்டுக்கூட்டமாய்தான் இருக்கும்.

இவர்களின் பிரச்சனையை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவர்களில் பலர் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க விரும்பாதவர்களே. இவர்கள் இப்படி பாதுக்காப்பற்றதாய் உணர காரணம் என்ன? நாம்தான். ஒரு லட்சம் பேர் இருக்கும் கல்வித்துறையில் பத்து சதவிகிதமாவது கறுப்பாடுகள் இருக்க முடியும். ஆனால் அதை பொதுவான ஒரு பிம்பமாய் உருவாக்கும் போது  தன் மாணவனை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கின்ற சாதாரண ஆசிரியனும் பாதிக்கப்படுகிறான். "முன்னெல்லாம் எந்த ஒரு பிரச்சனையினாலும் ஆசிரியர்  சொன்னா உடனே நம்புவாங்க. இப்போ மாணவன் சொன்னா உடனே ஆசிரியர்களை அடிக்க வராங்க" என்ற ஆசிரியர்களின் குரலையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

ஆசிரியர்களிடம் தவறே இல்லையென்று சொல்கிறேனா? இல்லை. ஆசிரியர்கள் மேல் வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளையும் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். பலர் இன்னும் விஞ்ஞான வளர்ச்சியில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள். மாணவர்களை பாதிக்கும் முக்கியமான டிஸ்லெக்சியா போன்ற வியாதிகளைப் பற்றிய அடிப்படை தெளிவு கூட இல்லை. ஆனால் தண்டனைகள் மட்டுமே இதற்கு தீர்வாகாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின் கருத்தை கேட்டே இதற்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து "ஆசிரியர்களே அனைத்துக்கும் காரணம்" என்ற அணுகுமுறை கொண்டால் பிரச்சினைதான் முற்றும். அதே போல் ஆசிரியர்களும் "நான் ஆசிரியர் - நீ மாணவன் " என்ற அணுகுமுறையை விட்டு  மாணவர்களை அவர்களின் முதிர்ச்சியை மதித்து நடத்த வேண்டிய காலமிது என்பதை உணரவேண்டும். இரண்டாம் பெற்றோர்களாய் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இன்று முதல் பெற்றோராய் இருக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. அனைத்து பிரச்சினைகளையும் தெளிவாக மாணவர்களிடம் பேச வேண்டியதிருக்கிறது. இனக்கவர்ச்சி போன்ற விஷயங்களுக்கு இதுவே வழி என்று உணர வேண்டும்.

முகாம் இறுதியில் என் முயற்சியாக நான் அனுப்பிய அறிக்கையில் சில பரிந்துரைகளை கொடுத்துள்ளேன். ஆசிரியர்களுக்கு Stress reduction, Leadership பற்றிய முகாம்கள் மற்றும் டிஸ்லெக்சியா பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவற்றை நடத்த வேண்டும். மாணவர்களிடையே அவர்களின் பருவ மாற்றங்களை - குறிப்பாக அவர்களின் மனரீதியான மாற்றங்களை பற்றி விளக்க தனியே நேரம் ஒதுக்கப்பட வேண்டும். என்று என்னால் முடிந்தளவுக்கு சங்கை ஊதியுள்ளேன். பார்ப்போம்...

தீர்க்க முடியாத பிரச்சனைகள்... புரிந்து கொள்ள முடியாத, விரும்பாத மனிதர்கள் என்று அவநம்பிக்கைக்கு பல காரணங்கள் இருந்தாலும் நம்பிக்கை தரும் பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பழனிவேலு. நடுக்குப்பம் என்ற தமிழகத்தின் மூலையிலுள்ள ஒரு அரசுப்பள்ளியில் அனைத்துப்  பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டு அனைத்து கவலைகளையும், பயங்களையும் பட்டுக்கொண்டு ஆனால் அதே சமயத்தில் நம்பிக்கை இழக்காமல் பணி செய்துக்கொண்டிருக்கிறார். தன் வகுப்பில் அனைத்து மாணவர்களின் பெயர், முகவரி, வீட்டிலுள்ளவர்களின் தொலைபேசி எண் என்று தனியே நோட்டு போட்டு எழுதி வைக்கிறார். வகுப்பில் மாணவர்களிடையே தயங்காமல் காதல் போன்ற அவர்களின் கேள்விகளை பற்றி அவர்களின் மொழியில் பேசுகிறார். இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு ஓடிப்போகலாமா என்ற குழப்பத்தில் போனில் பேசும் மாணவனிடம் நடுரோட்டில் நின்று தன் கை காசை செலவழித்து பேசி மனதை மாற்றுகிறார். படிக்க வராமல் லாரியில் போய் காசு பார்க்கலாம் என்று நினைக்கும் மாணவனிடம் தன் வாழ்கையை சொல்லி மனமாற்றுகிறார். இதற்கெல்லாம் அவருக்கு எதுவும் தனி பலன் இருப்பதாக தெரியவில்லை - வகுப்பில் நூறு சதவிகிதம் வராவிட்டால் மாவட்டத்தை விட்டு மாற்ற போவதாகதான் எச்சரித்திருக்கிறார்கள். இவர் ஒருவரை போல் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் கடமையுணர்ச்சியை நீங்கள் பாராட்டுவதாய் இருந்தால் அடுத்த முறை மாணவர் தற்கொலை போன்ற செய்திகள் வரும்போது இந்த ஆசிரியர்களே மோசம் என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்ய கூடிய மிகப்பெரிய உதவி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........