Thursday, December 27, 2012

மாணவர் தற்கொலை தடுப்பு முகாம்

எங்கடா ஆளைக் காணோம் என்று தேடிய, தேடாத நண்பர்களுக்கு.... கடந்த சில நாட்களாக எதுவும் எழுத தோன்றாமல் சிந்தனைகளும் நாட்களும் ஓடிக்கொண்டிருந்தன... அந்த தேங்கிய நிலையை உடைக்க என்ன செய்வதென்று யோசித்த போது ஏன் நாம் செய்வதையே பகிர்ந்திட கூடாதென்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு...
தற்சமயம் நான் வேலை செய்வது விழுப்புரம் மாவட்டத்தில். தமிழகத்தின் மிக பெரிய மாவட்டம். மாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்று. அதனை தடுக்க நாங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆசிரியருக்கான விழிப்புணர்வு முகாம். ஒரு வார காலத்தில் மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று ஆசிரியர்களுக்காக இதை நடத்துகிறோம். அதற்காக ஒரு கையேட்டை தயாரித்தோம். அதுவே இந்த பதிவு.

மாணவர் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் - கையேடு:
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களிடையே தற்கொலை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. நம் விழுப்புரம் மாவட்டத்திலேயே ஒரு சிறுமி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலருக்கு மறந்திருக்காது. அதே போல் கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயம் இதே போன்றதொரு முகாம் நம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அந்த அன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஆட்சியர் அவர்களின் முயற்சியால் மாணவர்களிடையே தற்கொலை தடுப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு திறன் வளர்க்க ஒரு செயல்த்திட்டம் உருவாக்கினோம். அதன் முதல் படியாக மாணவர்களுடன் நேரடி தொடர்பிலுள்ள அவர்களின் மதிப்பை பெற்ற தலைமையாசிரியர்களாகிய உங்களுக்கு தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவே இந்த முகாம்.
கலெக்டர் சம்பத் இந்த கையேட்டை வெளியிட்ட போது ...
உடன் எங்கள் இணை இயக்குநர் உதயகுமார், CEO திரு.முனுசாமி மற்றும்  ஆசிரியர்கள்

மாணவர் தற்கொலை – உண்மையான பிரச்சினையா?
National Crime records bureau அமைப்பின் கூற்றுப்படி நாளொன்றுக்கு நாடெங்கிலும் 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் இறக்கின்றார்கள். 2011 வருடம் மட்டும் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 2381 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். (2009ல் 2000 பேர்). இது மொத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 1.8% ஆகும். 14 வயதுக்குட்பட்டவர்களில் மட்டும் 3035 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த எண்களில் இருந்து மாணவரிடையே தற்கொலை என்பது மிகவும் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பது விளங்கும்.
மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்?
இதற்கு ஒரு காரணமென்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தற்கொலையும் ஒரு உயிரின் முடிவு. அதற்காக அவர்கள் தேடும் காரணங்களும் மாறுபடுகின்றன. ஆனால் மேலான காரணங்களை களைந்து விட்டு பார்த்தால் அடிப்படையில் சில பொதுவான காரணங்கள் உள்ளன.
மாணவர் உலகம் மூன்று தளங்களில் இயங்குகிறது. 
  • வீடு
  • பள்ளி
  • நண்பர்கள் மற்றும் விளையாட்டு

இவை ஒவ்வொன்றிலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் மாணவர்களின் மனநலனை பாதிக்கின்றது.
அமைதியான குடும்பச்சூழல் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. பெற்றோரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், அவர்களின் குடி முதலிய பழக்கங்கள் மாணவர்களை அவர்களின் குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்துகின்றன. அதன் விளைவாக அன்பும், தன்னம்பிக்கையும் அவற்றை ஊட்ட வேண்டிய தாய், தந்தையரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. “நான் வேண்டாதவன்” என்ற எண்ணம் அழுத்தமாக அவன் மனதில் பதிகின்றது.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் பெரும்பங்கு கழிவது பள்ளிகளில்தான். அதே போல் பெற்றோரை போல் பல சமயங்களில் அவர்களிலும் மேலாக அவன் எதிர்ப்பார்ப்பது ஆசிரியர்களின் அபிப்பிராயத்தைதான். பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை தேர்வுகள். தோல்வியை காட்டிலும் அவர்களுக்கு மிக பெரிய பிரச்சினையாக இருப்பது குறைந்த மதிப்பெண்கள். காரணம் குறைந்த மதிப்பெண் பெறும் போது அவர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். அந்த ஒப்பீட்டின் விளைவாக அவனுள்ளே “நீ எதற்கும் உதவாதவன்” என்ற எண்ணம் அவனுக்குள் உருவாகிறது. அதே போல் தேர்வில் தோல்வி என்பதும் மிக பெரிய பூதமாக அவனிடம் காட்டப்படுகிறது. “ஜெயித்தால்தான் உண்டு. தோற்றால் வாழ்க்கையே போய்விடும்” என்று திரும்ப திரும்ப சொல்லப்படும்போது தோல்வியடைந்தால் வாழ்க்கையேயில்லை என்று அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.
அதேபோல் மாணவப்பருவத்தில் நண்பர்கள், நட்பு என்பது மிக முக்கியமாக தோன்றுகிறது. நண்பர்கள் தன் மேல் வைக்கும் மதிப்பு அவனின் மனவளர்ச்சிக்கு மிக முக்கியம். ஏதேனும் ஒரு காரணத்தால் (உ.ம். உருவக்குறைப்பாடுகளோ, கூச்ச சுபாவம்) அவன் நிராகரிக்கப்பட்டால் அவன் தனித்து விடப்படுகிறான். அதன் மூலம் “நான் தேவையற்றவன்” என்ற எண்ணம் அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கின்றது.
இவையாவும் மாணவர்களிடையே மனசோர்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனின் அச்சாணியை முறிக்கும் கடைசி சம்பவமாய் ஏதேனும் ஒரு விஷயம் நிகழ்கிறது. அது தேர்வில் தோல்வியோ, ஆசிரியரின் கண்டிப்பாகவோ அல்லது குடும்பத்தாரின் கண்டிப்பாகவோ இருக்கலாம். அதன் பின் இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று சாவை தேடுகிறார்கள்.
தற்கொலை தடுப்பு – ஆசிரியர்கள் பங்கு – சில பரிந்துரைகள்:
தற்கொலை என்பது தீடீர் முடிவல்ல. சிறிது சிறிதாக ஒரு மனிதன் அதை நோக்கி தள்ளப்படுகிறான். முன்பே குறிப்பிட்டிருந்ததை போல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை கழிப்பது பள்ளியில்தான். ஆகவே ஆசிரியர்களே தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு மிக பெரிய உதவியாயிருக்க முடியும்.
1. தற்கொலையின் மிக முக்கிய காரணம் மனசோர்வு. அதை முதலிலேயே கண்டுப்பிடித்து விட்டாலே பாதிக்கும் மேல் தற்கொலைகளை தடுக்கலாம். மாணவர்களிடையே காணப்படும் மனசோர்வின் சில அறிகுறிகளை கண்டறிவது அவசியம்.
1.       தீடீரென்று மதிப்பெண் குறைவது.
2.       படிப்பு, விளையாட்டு என்று எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது.
3.       தனிமையை விரும்புவது.
4.       வகுப்பில் தீடீரென்று பிரச்சினை செய்வது.
5.       பசி, தூக்கம் குறைந்ததென்று கூறுதல்.
6.       நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துதல்.
7.       காரணமில்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்தல்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அந்த மாணவனை அழைத்து பேசுங்கள். பல சமயங்களில் தற்கொலை முயற்சி செய்பவர்கள் தேடுவது தங்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கும் ஒரு நபரைதான்.
2. மாணவர்களிடம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களின் தோல்விகளை பெரிதுபடுத்திக்காட்டாமல் அவர்களை அதன் காரணங்களை ஆராய செய்யுங்கள். அவர்களின் தன்னம்பிக்கையை வளருங்கள்.
3. வகுப்புகளில் நீங்கள் வாழ்வில் சந்தித்த வெற்றிகளையும், தோல்விகளையும் பகிருங்கள். பிரச்சினைகளை சமாளித்த விதத்தை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அவர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக அமையும்.
4. மாணவர்களிடையே அதீத கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டியுங்கள். ஊனம் என்பது அருவறுப்பானதல்ல என்று விளக்குங்கள்.
5. ஒரு மாணவன் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கண்டிக்காமல் அவர்களின் காரணத்தை கேளுங்கள். அதற்கு தற்கொலை தவிர வேறு வழிகள் என்னவெல்லாம் உண்டென்று விளக்குங்கள். அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ, தனிப்பட்ட கவனம் செலுத்துவதோ வேண்டாம்.
6. அவர்களின் பிரச்சினைக்கு காரணம் பெற்றோர் என்றால் அவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் மாணவர்களின் மன நிலை எந்தளவுக்கு பாதித்துள்ளதென்று விளக்குங்கள்.
7. தற்கொலை பற்றி நேரடியாக வகுப்பில் பேசாதீர்கள். அதை விட பிரச்சினைகளை சமாளிக்கும் மற்ற வழிமுறைகளை பற்றி பேசுங்கள்.

மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினையை சொல்ல சரியான நபரில்லாததுதான் பல தற்கொலைகளுக்கு காரணம். அவர்களின் குரலை கேட்க உங்களின் நேரத்தை ஒதுக்கி பொறுமையுடன் இருக்க முடியுமென்றால் பலர் வாழ்கை மாற நீங்கள் காரணமாயிருக்கலாம்.
******************************************************************************************************************************************************************************************************************************************
முகாம் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஒரு வார முகாமின் சுவாரசியங்களை அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

Thursday, December 6, 2012

விந்தை மனிதர்கள், வித்தியாசமான வியாதிகள்...

என் அறிமுகப்பதிவிலேயே மனநோய்கள் சில சமயம் சுவாரசியமானவை என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாய் வெகு விரைவில் மறக்கப்படும் மனநோயாளிகளில் சிலர் மட்டுமே அவர்களின் வியாதியின் அறிகுறிகளால் நினைவில் கொள்ளப்படுகின்றனர். இந்தப்பதிவுத்தொடரில் அது போன்ற சில வினோத அரிய வியாதிகளையும் அவை பாதித்த மனிதர்களையும் பார்ப்போம். 

எங்கள் சிறு வயதில் ஒரு விளையாட்டு உண்டு. தீப்பெட்டிகளின் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு அவற்றை ஒரு கல் கொண்டு கொத்தி வெளியே எடுக்க வேண்டும். அந்த தீப்பெட்டி அட்டைகளில் ஒரு தகுதி வரிசை உண்டு. சிலவற்றுக்கு மதிப்பு அதிகம். முக்கியமாக ஒரு சில சமயங்களில் பின்னால் தவறுதலாக அட்டைப்படத்தை மீண்டும் அச்சிட்டிருப்பார்கள். அவற்றுக்கு இரட்டை மதிப்பு. அந்த காலத்தில் எங்கள் எல்லோருக்குமே அந்த அழுக்கு அட்டைகளை சேகரிப்பதில் ஒரு ஆர்வம்... வெறி... ஒரு நாள் நான் சேர்த்து வைத்திருந்த அழுக்கு அட்டைகளின் நாற்றம் தாங்காமல் அதை தலை முழுகி விட்டுத்தான் வீட்டுக்குள் வர வேண்டுமென்று காதைத்திருகி "அன்பு"க்கட்டளை இடப்பட்டபின் என் நண்பனிடம் அவற்றை அள்ளிக்கொடுத்தேன். அதன் பின் எப்போது அவன் அதைக் கொண்டு விளையாடினாலும் ஏக்கத்துடன் அங்கே சென்று நின்றுக்கொண்டிருப்பேன். அதன் பின் மற்ற விளையாட்டுகள் வந்தன. அந்த அழுக்கு அட்டைகளையும் அவை தந்த வருத்ததையும் நினைவுகளின் கல்லறையில் புதைத்து விட்டு வாழ்க்கையில் நகர்ந்து விட்டேன்.

நாம் எல்லோருமே ஏதோ ஒன்றை மிக ஆசையுடன் சேகரித்துக்கொண்டிருப்போம். பணம், புத்தகம், பாடல், தபால்தலை என்று நமக்கு முக்கியமாக தெரியும் அவைகள் மற்றவருக்கு குப்பையாக தெரியும். ஆனால் எல்லா சேகரிப்புகளும் ஒரு இறுதி தினமிடப்பட்டே வருகின்றன. என்றோ ஒரு நாள் சேர்த்து வைத்த அந்த பொருட்கள் அத்தனையையும் ஏதோ ஒரு காரணத்தால் இழக்கிறோம். அப்படி இழக்க விரும்பாமல் சேகரிக்கும் மனிதன் எவ்வளவுதான் சேர்ப்பான்?...

கோலியர் சகோதரர்களைச் சந்தியுங்கள்....

ஹோமர் மற்றும் லாங்க்லி
1947 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் ஹார்லம் பகுதியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரென்று சொல்லாமல்,ஒரு முகவரியைக் குறிப்பிட்டு அங்கே ஒரு பிணம் கிடப்பதாக மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான். அந்த முகவரியின் சொந்தக்காரர்கள் கோலியர் சகோதரர்கள்.

ஹோமர் மற்றும் லாங்க்லி கோலியர்.அண்ணன் தம்பி.பிறவிப் பணக்காரர்கள்.அவர்கள் பரம்பரை சொத்துதான் அந்த வீடு. திருமணமாகாமல் தன்னந்தனியே வசித்து வந்த அவர்களுக்கு இயல்பாகவே மனிதர்களுடன் பழகுவது பிடிக்காத சங்கதியாயிருந்தது. கூடவே அந்தக் காலகட்டத்தில் ஹார்லம் பகுதி கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. திருட்டு பயமும் ஜாஸ்தி. அவர்கள் மத்தியில் யாரிடமும் பழகாத இவர்களின் குணம் ஒரு புதிராக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. அவர்களிடம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் இருப்பதாக புரளி கிளம்ப அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைவதும் திடீர்திடீரென்று அழைப்பு மணியை அடிப்பது, ஜன்னல் மேல் கல் எறிவது என்று அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. மூத்தவர் ஹோமர் இதற்குள் சக்கர நாற்காலியில் மூட்டுப் பிரச்சினையால் முடங்க, இளையவர் லாங்க்லி மிகவும் பயந்து போனார். அதன் விளைவாக, அவர் மேலும் மேலும் மனிதர்களைத் தவிர்க்கத் தொடங்கினார். ஜன்னல், கதவு என்று எல்லா இடத்தையும் பெரிய பெரிய பெட்டிகள் கொண்டு அடைக்க ஆரம்பித்தார். யாரும் பார்க்காத இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வருவது, சின்னத் தேவைகளுக்குக் கூட மிகத் தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வதென்று மேலும் மேலும் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தார்.

ஒவ்வொன்றாக நாகரீகம் அந்த வீட்டிலிருந்து செல்ல ஆரம்பித்தது. நாங்கள் உபயோகிக்காமல் பில் வந்துள்ளதென்று தொலைப்பேசிக் கட்டணத்தைக் கட்ட மறுக்க, தொலைப்பேசி தொலைந்தது. வருமானம் இல்லையென்று வரி கட்ட மறுக்க, மின்சாரம் மறைந்தது. தண்ணீர் இணைப்பும் அஃதே. ஆனால் எதற்கும் அசராமல் கெரசின் அடுப்பும், பதப்படுத்திய உணவுகளும் கொண்டு சமாளித்தார்.

இதற்கிடையே ஹோமருக்கு மெல்ல மெல்ல கண் பார்வை மறையத் தொடங்கியது. அதற்கும் வெளியே வராமல், தாங்களே வைத்தியம் பார்த்துக்கொள்ள கண் பார்வை போனது. இந்த சமயத்தில் ஒரு முறை ஜப்தி செய்ய வந்த போலீஸ்காரர்களையும், பேங்க் அதிகாரிகளையும் விரட்டியடித்தார்.அப்போது அங்கே இருந்த பேப்பர் மூட்டைகளைப்  பார்த்து,"இது என்ன?" என்று போலீஸ் அதிகாரி கேட்க, அண்ணனுக்கு கண் பார்வை திரும்பும்போது படிக்க என்று பதிலளித்தார் லாங்க்லி. அந்த முறை அவரின் கடன்களை ஒரே காசோலையில் தீர்க்க, அதன்பின் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மெல்ல சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் சீண்டலிலிருந்தும் அந்த சகோதரர்கள் மறைந்தனர்- அந்த தொலைப்பேசி அழைப்பு வரும் வரை...

அந்த வீடு
அழைப்பு மணிக்கு பதிலில்லாமல் போக, கதவை உடைத்து திறந்த போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சி. வாசலை அடைத்து பெட்டிகள். எந்தக் கதவை, ஜன்னலை உடைத்தாலும் பெட்டிகள், தடுப்புகள். அது பத்தாதென்று தாங்க முடியாத நாற்றம் வேறு. வேறு வழியில்லாமல் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட ஆரம்பித்தார்கள். முதல் தளத்தில் ஒரு வழியாக உள்ளே நுழைய இடம் கிடைத்து நுழைந்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. வீடு முழுக்க மேற்க்கூரையைத் தொடும் குப்பைகள்,  தினசரிகள், புத்தகங்கள், டப்பாக்கள்,குப்பையில் கிடந்த சாமான்கள், எட்டு உயிருள்ள பூனைகள் என்று பலவற்றைக் கொண்டு வீட்டை ஒரு புதிர் கிடங்காக மாற்றியிருந்தார்கள். இதில் ஆங்காங்கே குப்பைகளுக்கு நடுவே சுரங்கப்பாதைகள். அவற்றில் யாரும் நுழைவதைத் தடுக்க, கண்ணிகள். அவைகளைத் தட்டினால் அருகே இருக்கும்  குப்பை சரிந்து அமுக்கி விடும். என்னடா இதுவென்று நொந்து போன போலீஸ், அந்த குப்பைகளை கவனமாக அள்ளிக்கொட்ட துவங்கியது.
கூரையைத் தொடும் குப்பை
குப்பையின் நடுவே சுரங்கப்பாதை





இரண்டு நாட்களுக்குப் பின் ஹோமரை கண்டெடுத்தார்கள்.தன் சக்கர நாற்காலியிலேயே உணவில்லாமல் இறந்து கிடந்தார். ஆனால் லாங்க்லியைக் காணோம். தொடர்ந்து குப்பையை அள்ள, ஹோமருக்கு சற்று தொலைவிலேயே அவர் சடலமும் கிடந்தது. அண்ணனுக்கு உணவு கொண்டு வரும்போது, தவறுதலாக அவர் வடிவமைத்த கண்ணியில் அவரே சிக்கிக் கொள்ள, அவர் சேகரித்த குப்பைகளே அவரை நசுக்கிக் கொன்று விட்டது. அதன்பின் அண்ணன் பசி, தாகத்தில் இறந்திருக்கலாம் என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.

அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்ய ஒரு வாரம் பிடித்தது. அங்கிருந்து எடுத்த குப்பையின் அளவு- அதிகமில்லை ஜென்டில்மேன்.....

 140 டன்தான்!!!...

வெளிநாடுகளில் இது போல விசித்திர மனிதர்கள் அவ்வபோது செய்திகளில் தோன்றுவார்கள். அவர்கள் சேர்த்து வைக்கும் குப்பையின் அளவே அவர்களின் பிரபலத்திற்குக் காரணமாயிருக்கும். இது போன்று சேகரிப்பவர்களுக்கு என்ன பிரச்சினை?

Syllogomania or Compulsive Hoarding என்று பேன்சி பெயர்களில் இதை அழைக்கிறார்கள். பொதுவாக இது போன்று சேகரிப்பவர்களுக்கென்று சில பொதுவான குணங்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் வயதானவர்களாகவோ, மன நலம் குன்றியவர்களாகவோ இருக்கின்றனர். யாருடனும் பழகாமல் தனியாக வசிக்கின்றனர். வேறு ஏதோ மனப்பிரச்சினையின் வெளிப்பாடாகவே இது போன்று சேகரிக்கும் பழக்கம் பல சமயங்களில் உள்ளது.

இது போன்று நம் நாட்டிலும் உள்ளனரா? அதிகம் வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருப்பது போன்று இல்லாமல், நம் நாட்டில் குடும்பமாய் வசிப்பதினாலும், தனி மனித சுதந்திரத்தை அவர்கள் அளவுக்கு போற்றாமல் இருப்பதாலும்,  இந்த சகோதரர்களைப் போல் இல்லாமல் சீக்கிரமே கண்டறியப்படுவது காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது "தேவையில்லாமல் குப்பையைச் சேர்க்கிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டை கேட்பதுண்டு. அவற்றின் அடிப்படையான மனோவியாதிக்கு வைத்தியமளித்தால் இந்த பழக்கம் குறைகின்றது அல்லது சில சமயம் மறைகின்றது.

உயிருள்ளவரை ரகசியமாக மறைக்கப்பட்ட வாழ்க்கையை மரணம் வெட்டவெளிச்சத்தில் உரித்துக் காட்டியதை காலத்தின் கோலம் என்பதைத்தவிர என்ன சொல்ல?...

Monday, December 3, 2012

Stress - அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்... 2

STRESS!!! நீங்க நல்லவரா? கெட்டவரா?

எக்ஸாம் நாட்களுகென்று ஒரு தனிக்குணம்உண்டு. காலை எழும்போதே பளிச்சென்று இருக்கும்.பல் துலக்கும் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, சாப்பிடும் போது என்று எந்த ஒருத்தருணத்திலும் வேறு சிந்தனைகளே ஓடாது. படித்ததை விட படிக்காததே  எப்போதும்  அதிகமிருக்கும். இதில் இருக்கிற டென்ஷன் பத்தாதென்று இது வரைக்கும் வெட்டு பழி குத்து பழியாயிருந்தவர்கள் கூட ,"மச்சி! இந்த topic படிச்சிட்டியாடா? ரொம்ப முக்கியமான topic டா. கண்டிப்பா கேள்வி வருது" என்று நாம் படிக்காத தலைப்பையே சொல்லுவார்கள். அதற்கு "படிச்சேன்டா" என்று நண்பன் பதில் தரும்போது ,"ராத்திரி முழுக்க நம்ம கூடத்தானேயிருந்தான்" என்று "கிரி" வடிவேலு கணக்காய் லுக் விட்டு கிளம்பினால் அப்போதுதான் வருஷம் முழுக்க கும்பிடாத பிள்ளையார்  ஞாபகம் வருவார். கும்பிட்டு exam hallக்குள் போய் உட்கார்ந்தால் அடுத்த மூன்று மணி நேரம் போவதே தெரியாது. ஐந்து நிமிடமிருக்கும்போது அரக்க பரக்க பதிலை கிறுக்கி தாளை கட்டிக்  கொடுத்துவிட்டு போய் சாப்பிட்டு படுத்தால் அப்போது வரும் தூக்கத்துக்கு ஈடு இந்த உலகில் கிடையாதென்று தோன்றும். யோசித்துப் பாருங்கள், இது போன்ற நாட்களில் நம்மை முழுவதும் துடிப்போடும் விழிப்போடும் வைத்திருப்பது எது? - எக்ஸாம் என்கிற stress தானே......! அப்போ stressனால ஒரு நல்லது நடந்தா, stress நல்லதுதானே....

இதற்கு  பதில் சொல்லும்முன் பத்ரியின் கதையை பார்த்து விடுவோம். பத்ரி +2 பையன். பயங்கர படிப்பாளி. காலை 5மணிக்கு ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை ஸ்கூல், டியூஷன் என்று பரபரவென்று ஓடுபவன்.அனால் கடந்த ஒரு மாதமாக தாமதமாக எழுகிறான். ஸ்கூல் போகவே கஷ்டப்படுகிறான். tution எட்டிப்பார்ப்பதே இல்லை.வகுப்பில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும், அது படிப்பு சார்ந்ததாகயிருந்தால் ஈடுபட மறுக்கிறான். எல்லாவற்றையும்விட புத்தகத்தை தொடவே மறுக்கிறான். ஆனால் விளையாட்டு,கதைப்புத்தகம் என்றால் அதே ஆர்வத்துடன் இருக்கிறன். அவன் பெற்றோர் பயந்து போய்க் கூட்டி வந்தனர். அவனிடம் பேசிய போது ஒன்று விளங்கியது. அவன் அப்பாவுக்கு அவனை டாக்டராக்க ஆசை. அவனிடம் அடிக்கடி "+2 exam முக்கியம். அதுல கண்டிப்பாக பாஸ் பண்ணிடனும்" என்று சொல்லிக்கொண்டே  யிருப்பார். நாள் முழுக்க இந்த exam பற்றியே பேச்சு. இடையில் ஒரு testல் மதிப்பெண் குறைந்ததிற்கு அவர் கண்டிக்க ஒருக்கட்டத்தில் exam பூதம் போன்று அவனுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது. exam எழுதினாலும் தோல்விதான் கிடைக்கும் என்று அவன் மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதுவே படிப்பென்றால் வெறுப்பாக, பதட்டம் தரும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அவன் புத்தகத்தையே தூக்கிப்போட்டு விட்டான். இப்போது சொல்லுங்கள் - இப்படி ஒரு பையனின் படிப்பை எதிர்காலத்தை பாதிக்கிறதென்றால் எக்ஸாம் என்கிற stress கெட்டதுதானே? 

நல்லவேளை!!! "தெரியலையேப்பா!" என்று சொல்லாமல் இந்தக் கேள்விக்கு விஞ்ஞானம் பதிலளிக்கிறது. 

என் சென்றப் பதிவில், stress என்ற வார்த்தையை தந்த HANS SEYLE என்ற விஞ்ஞானியைப்பற்றி சொன்னேன். அதற்கு முன் சூழ்நிலைகளுக்கும் மனித மனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி அதிகம் அறிந்திராத நம் விஞ்ஞானத்திற்கு ஒரு தெளிவான சாத்தியமான பதிலை தந்தார். அவரின் கருத்துப்படி எந்த ஒரு உயிரினமும் அதற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது அதனை எதிர் கொள்ள தயாராகிறது. இந்த தயார் நிலை அதை அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள உதவும். அதற்கான ரசாயனங்களை சுரக்கிறது. சக்தியை சேமிக்கிறது. விழிப்பாக்குகிறது. இது எல்லாம் அதன் செயல்பாட்டிற்கு உதவினாலும், சில காலம் வரை தான். அதன் பின் மெல்ல மெல்ல அந்த தயார்நிலையே அதற்கு எமனாகிறது. அதனால் செயல் பட முடியவில்லை. அதே போல்தான் மனிதன் பிரச்சினைகளை எதிர் கொள்வதும். exam என்ற stress அந்த எக்ஸாம் நாளன்று நம்மை முனைப்பாக்கி நம் செயல்பாட்டை அதிகரிக்கும்போது நல்லதாயிருக்கிறது. ஆனால் அதுவே தொடர்ந்து இருக்கும் போது நம்மால் தாங்கமுடியவில்லை.நம் performance படுத்து விடுகிறது. ஆகவே stress -நல்லதா? கெட்டதா? அளவான stress நல்லது. அதே அளவுக்கு மீறிச்செல்லும்போது நம்மை உடைப்பதால் கெட்டது.

stress என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்களால் உருவாவதா? ஏன் சிலர் அதிகம் stress அனுபவிக்கிறார்கள்? சிலர் அனுபவிப்பதில்லை. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.......