பலருக்கு மனநோய்க்கான வைத்தியம் என்றாலே அது கவுன்சலிங் தான். ஆனால் அதை ஒரு சர்வரோக நிவாரணிப் போல ஒரு கருத்தும் உள்ளது. அது சரியா? உண்மையில் கவுன்சலிங் என்ன செய்யும்? இந்த பதிவில் பார்ப்போம்....தமிழர்களின் அகராதியில் மனநல வைத்தியம் என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் பிரிவுக்கு வரும்போது "கொஞ்ச நாளா ஒரு மாரி இருக்கான் சார்... கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூடி வந்தோம்" என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே சரியான தெளிவில்லாமல் இருப்பதால் கவுன்சலிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஏமாற்றி காசுப்பிடுங்கும் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. இந்த பதிவில் கவுன்சலிங் என்ற சிகிச்சை முறையின் பயன், பயனின்மை பற்றி சற்றே விரிவாக முடிந்தளவுக்கு எளிதாக சொல்கிறேன்.
மன நோய்களுக்கு சிகிச்சை என்பதே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானதுதான். அதற்கு முன் மாட்டு மந்தைகளை போல மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் அடைத்து வைக்க மட்டுமே முடிந்திருந்தது. அந்த சூழ்நிலையில்தான் சிக்மண்ட் பிராய்ட் தோன்றினார். அது வரை புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த மனதின் இயக்கத்தை புரிந்துக்கொள்ளவும் அதற்கு விஞ்ஞான சாத்தியமுள்ள விளக்கமொன்றை தந்ததால் பலர் அவரை பின்பற்றத்தொடங்கினார்கள். 1930கள் வாக்கில் அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கிட்டத்தட்ட மன நல மருத்துவ உலகின் MGR என்றே அவரை சொல்ல வேண்டும். ஆனால் அந்த சமயத்தில்எதிர்க்கவே முடியாதென்றிருந்த அவரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது. காரணம் ப்ராய்ட் மனிதனின் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது செக்ஸ் மட்டுமே என்று கருதினார். மனிதர்கள் இயல்பாகவே அழிவு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டவர்கள் என்ற ப்ராய்டின் கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. இது மனித மனதை அதன் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை குறுகிய பார்வையுடன் ஆராய்வது என்று கருதினார்கள். ப்ராய்டின் சிகிச்சை முறைக்கு மாற்றாக புது வழி முறைகளை உருவாக்க தொடங்கினர். அவற்றில் கவுன்சலிங் என்ற இந்த வழிமுறையும் ஒன்று.
இதன் அடிப்படை சித்தாந்தம் எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையை நல்ல திசையில் கொண்டு செல்லவே எண்ணுகிறான்.ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தவறான முடிவெடுக்கிறான். அந்த தவறுகளின் விளைவாக பிரச்சனைகள் தோன்றும்போது அவனுக்கு அவன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் ஒரு துணை தேவைப்படுகிறது. So ஒரு நல்ல கவுன்சலரின் வேலை அவனுக்கு அவன் எடுக்கும் முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை எடுக்க தூண்டிய காரணிகளை ஆராய்ந்து தெளிவான முடிவெடுக்க உதவுவதுதான்.
கவுன்சலிங் - உண்மையில் என்ன...
கவுன்சலிங் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொடுத்து கொள்கின்றார்கள். ஆனால் அனைவரும் புரிந்து கொண்ட ஒரே விஷயம் - கவுன்சலிங் ஒரு பேச்சு வைத்தியம் (TALK THERAPY). இதை ஏன் சொல்கிறேன் என்றால் மருத்துவராயில்லாத சிலர் கவுன்சலிங் தருகிறேன் என்று கிளினிக் ஆரம்பித்து விட்டு மனநல மருந்துகளை எழுதிக்கொடுக்கின்றனர். மருந்துகளின் செயல்பாடறியாத இவர்கள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிட்டால் உடலுக்கு கேடு வருவதுதான் மிச்சம். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் Consult செய்பவர் மனநல மருத்துவர் (PSYCHIATRIST) அல்லாத பட்சத்தில் கவுன்சலிங் பேர்வழிகள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிடாதீர்கள்...
சரி விஷயத்துக்கு வருவோம்... கவுன்சலிங் என்பது பேச்சு வைத்தியம் என்று சொன்னேன்... அதில் என்னதான் செய்ய வேண்டும்...
வேற என்ன... பேசத்தான் வேணும்!!!....
அடப்போய்யா... அதுக்கேதுக்கு கூட்டிட்டு வரணும்... அதான் வீட்லயே நாங்க நிறையா அட்வைஸ் பண்ணிட்டோமே என்று சொல்லும் முன் பொறுங்கள்...
அட்வைஸ் என்பது வேறு... கவுன்சலிங் வேறு...
கவுன்சலிங் செய்வதின் அடிப்படையே நம்பிக்கைதான்... "நீயும் என்னை போல் ஒரு மனிதன்... ஒரு சூழ்நிலை காரணமாக உனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சமாளிக்க உன்னால் முடியவில்லை... அதனால் நீ குறைச்சல்... நான் உன்னை விட உசத்தி.. எனக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை... உன்னால் உன் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்... அந்த நம்பிக்கையோடே உன்னை பார்க்கிறேன்..." என்று அணுகுவதே சரியான கவுன்சலிங்... அதாவது நம்மை அணுகுபவர்களுக்காக முடிவுகளை நாம் எடுக்காமல் அவர்கள் எடுக்க உதவி செய்வதே கவுன்சலிங்... முடிவை நாம் எடுத்தால் அது அட்வைஸ்...
உதாரணமாக... ஒரு கான்சர் நோயாளியிடம் "தோ.. பாரு... ஏற்கனவே சிகரெட் பிடிச்சு பிடிச்சு நுரையீரல் பாதிச்சுருச்சு... இனியும் குடிச்சா செத்துத்தான் போகணும்... ஒழுங்கா இப்போவே நிறுத்திடு...." என்றால் அது அட்வைஸ்.... மாறாக அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கி எது அவனை சிகரெட் பிடிக்க தூண்டுகிறதுதென்று அவன் உணருமாறு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளை உணர செய்து அதன் பின்னும் முடிவெடுக்கும் பொறுப்பை அவனுக்கே விட்டால் அது கவுன்சலிங்....
இதை படிக்கும்போதே உங்களுக்கு தோன்றியிருக்கும்... இப்படியெல்லாம் யார் செய்ய முடியுமென்று... So that brings us to the next question....
யார் கவுன்சலிங் கொடுக்கலாம்??
அடிப்படை கல்வி தகுதியும், Active listening என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் நல்ல கவுன்சலர் ஆகலாம். ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் Psychology graduate அல்லது Doctorate முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses உள்ளன - அதை முடித்தவர்களோதான் நிஜமாகவே கவுன்சலர்களாக பணியாற்ற முடியும். அடுத்த முறை இது போன்று கவுன்சலிங் கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள். எந்த துறையை விடவும் இதில் போலிகள் அதிகம். No counselling is better than wrong counselling.
சரி.. படித்தால் மட்டும் ஒருவர் நல்ல கவுன்சலிங் தந்து விட முடியுமா... நல்ல கவுன்சலரின் தகுதிதான் என்ன????
அடுத்த பதிவில் தொடர்கிறேன்...