Friday, July 5, 2013

உதவாத கரங்கள்...விந்தை மனிதர்கள்... வித்தியாசமான வியாதிகள் ...2

உதவாத கரங்கள்...

நேற்று ஒரு வணிக வளாகத்தில் ஒரு தற்கொலை. ஒரு இளைஞர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதை மெயின் செய்தியின் ஓரத்தில் இன்றைய பத்திரிகைகளில் வந்த ஒரு பெட்டி செய்தியினை பற்றியதுதான் இந்தப்பதிவு.

அந்த இளைஞர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது வெளியே வேறு ஒரு போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. விழுந்த அந்த இளைஞரை  போலீஸ் உட்பட யாரும் நெருங்கவில்லை - கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத்திற்கு... அதன் பின் யாரோ சிலர் முயன்று ஆட்டோ வைத்து அவரை கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். அங்கிருந்தவர்கள் அதை கண்டித்து வழக்கம் போல் போராடியிருக்கிறார்கள்.

இது முதல் முறையில்லை. சில காலம் முன் அமைச்சர்கள் முன் குண்டு வெடித்து இறந்த எஸ்.ஐ., டெல்லி கற்பழிப்பில் இறந்த பெண் என்று இடம், காலம் மட்டும் வேறுப்பட்டு இது வரை பல நிகழ்வுகள். இந்த சம்பவங்கள் எல்லாமே ஒரு ஒற்றுமை கொண்டுள்ளன. நம் முன் ஒரு சக உயிர் துடிக்கும்போது பாய்ந்து முன் செல்ல நம்மை தடுப்பது எது? இந்த கேள்விக்கு பலரும் பல பதில் சொல்லக்கூடும். உளவியல் என்ன சொல்கிறது??? அதற்கு நீங்கள் கிட்டி ஜெனோவேஸ்கியை (Kitty Genovese) தெரிந்துக்கொள்ள வேண்டும்.


கிட்டி ஒரு நடுத்தர வர்க்க சராசரி அமெரிக்கப்பெண். 1964 நியூயார்க் நகரத்தில் ஒரு பாரில் வேலை செய்தபடி தன் வாழ்கையை கழித்து வந்தார். ஒரு குளிர் நிறைந்த மார்ச் காலையில் அவரை உலகப்புகழ் தேடி வந்தது - எமன் வடிவில். அன்று தன் வேலை முடிந்து அவர் வீடு திரும்பி தன் காரை நிறுத்தி விட்டு திரும்பியபோது அவனை கவனித்தார். வேகமான அவனின் நடையே அவருக்கு தீவிரம் உணர்த்த நூறு அடி தொலைவிலிருந்த தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவன் அவரை நெருங்கி தன்னிடமிருந்த கத்தியால் அவரை குத்த ஆரம்பித்தான். காப்பாற்ற சொல்லி அவர் அலற எதிரே இருந்த அப்பார்ட்மெண்ட்டில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. யாரோ "ஏய்! அவளை விடுடா!!!" என்று கத்தினார்கள். அவன் ஓடிவிட்டான். விளக்குகள் அணைந்தன. ஒரு அமைதி சூழ்ந்தது. கிட்டி மெல்ல மெல்ல தவழ்ந்து தன் அப்பார்ட்மெண்டின் கதவை அடைந்தார். ரத்தம் ஒழுக ஒழுக அவர் கிடக்க, அவன் மீண்டும் வந்தான். பின்னாளில் அவனிடம் கேட்டப்போது "வேலையை முடிக்க வந்தேன்" என்றான். ஆடைகளை அறுத்தான். பலாத்காரம் செய்தான். பின் மிச்சமிருந்த உயிரை குத்தி பறித்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றான். இது நடந்த நேரம் முழுவதும் கிட்டி அலறி, அழுதுக்கொண்டிருந்தார். 38 பேர் கேட்டார்கள். கேட்டாலும் உதவத்தான் யாருமில்லை. 

எல்லாம் முடிந்து போலீஸ் வந்தப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி - இத்தனை பேரில் ஒருத்தருக்கு கூடவா முதல் முறை சத்தம் கேட்ட உடனே போலீசை கூப்பிட தோணவில்லை? என்றதுதான். அதற்கு அவர்கள் சொன்ன பதில் அமெரிக்காவையே உலுக்கியது.
"ஏதோ லவ்வர்ஸ் பிரச்சினைன்னு நினைச்சேன்"
"நான் கூப்பிட போனேன். எதுக்கு வம்புன்னு என் பொண்டாட்டி தடுத்துட்டா"
"யாராவது கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன்"
இதை விட அனைவரையும் உலுக்கிய பதில் - "நான் பார்த்துக்கிட்டிருந்தேன். ரொம்ப டயர்டா இருந்தது. தூங்க போய்டேன்."

இதை சொன்னவர்கள் யாரும் மோசமானவர்களில்லை. மனப்பிரச்சினை உள்ளவர்கள் இல்லை. யாருக்கும் இறந்தவருடன் பிரச்சினையில்லை.பின் ஏன்?

பெருநகர மக்களின் பொது குணம் என்று ஒதுக்கி விட்டு போகாமல் உளவியல் நிபுணர்கள் காரணத்தை ஆராய இறங்கினார்கள். பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவில் சில பொதுவான விஷயங்கள் புரிந்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட முறையில் அந்த அபார்ட்மெண்ட்டில் இருந்த அனைவருமே அவருக்கு உதவியிருப்பார்கள். ஆனால் ஒரு குழுவாக ஒன்று சேரும்போது அவர்களிடையே ஒரு மௌனப்பரிமாற்றம் நடைப்பெறுகிறது. "நாம் ஏன் செய்ய வேண்டும்? இத்தனைப்பேர் இருக்கிறார்களே... அவர்களில் யாராவது செய்யட்டுமே" என்ற தட்டிக்கழித்தல் தொடங்குகிறது. இதை Diffusion of Responsiblity என்கிறார்கள். கூட்டம் கூட கூட உதவிக்கு வரும் எண்ணம் குறைய ஆரம்பிகின்றது. இதைத்தான் Bystander Effect என்கிறார்கள்.

பொதுவில் அறிமுகமில்லாத ஒருவருக்கு உதவ வேண்டுமென்பதில் எல்லோரும் சில கட்டங்களை கடந்தாக வேண்டும்.
1. கவனித்தல்: ஒரு விபத்தோ, ஒரு அலறலோ சட்டென்று கவனிக்கப்படும். ஆனால் பிசியான தெருவில் மயங்கிக்கிடக்கும் மனிதன் அந்த பின்புலத்தில் ஒன்றாகிறான். ஒரு வேளை அவனை கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ள மறுக்கிறோம். இதே யாருமேயில்லாத தெரு. நாம் மட்டும் தான் அங்கே இருக்கிறோம் என்னும் போது அவனை நம்மால் அவ்வளவு எளிதாக ஒதுக்க முடியாது. காரணம் நாம் பொதுவில் எது சரியென்று கருதுவது."நாம் போய் பார்த்தா சீன் போடறோம்னு ஆயிடுமோ?" என்ற எண்ணம் துவங்கும் போதே நமக்கு அதை தவிர்க்கும் ஒரு கூச்சம் வந்து விடுகிறது. மனம் அதை கவனத்திலிருந்து தள்ளுகிறது.

2. புரிதல்: அது நம் உதவி தேவைப்படுகிற இடமென்று புரிய வேண்டும். முந்தய உதாரணத்தில் சொன்ன நபர் ஒரு மதுக்கடையின் முன் விழுந்து கிடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேலை நாம் கவனித்தாலும் உதவ தயங்குவோம். காரணம் குடிகாரனுக்கு உதவுவது தவறென்ற நம் சமுதாயப்பார்வை.தனியே கேட்டால் "ச்சே! குடிகாரன்னா என்ன சார்... என்ன ஆச்சுன்னு போய் பாக்கிறதுக்கு என்ன..." என்பார்கள். ஆனால் கூட்டத்தில் ஒன்றாக இருக்கும் போது  "அதான் இத்தனை பேர் பார்த்துட்டு போறாங்களே...  தெரியாமலா போறாங்க..." என்பார்கள். இதற்கு Pluralistic Ignorance என்று சொல்கிறார்கள். குடிகாரன் என்றால் உதவக்கூடாது என்ற கண்ணோட்டம் தவறென்று தெரிந்தாலும் அது சமுதாயப்பார்வை என்று யாரும் ஏதும் செய்ய தயங்குவார்கள். டில்லி கற்பழிப்பில் அந்த மாணவிக்கு யாரும் உதவ முன் வராததற்கு சொல்லப்பட்ட காரணம், அந்த பெண் நிர்வாணமாக கிடந்ததால் அவள் தவறானவள் என்று பலர் எண்ணியதுதான்.

3. பொறுப்பெடுத்து கொள்ளல்: ஒரு விபத்து... பல வாகனங்கள் நிற்கின்றன... சிலர் இறங்கிப்போய் பார்க்கிறார்கள்... உடனே திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் மனிதர்களுக்கும் உடனிருந்து உதவி செய்யும் மனிதர்களுக்கும் எங்கே வித்தியாசம் வருகிறது... உதவலாம் என்ற எண்ணம் செயலாக அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள சில வித்தியாசங்கள் மனிதர்களிடம் உண்டு...
1. யாருக்கு உதவி தேவை... சமுதாயத்தில் சிலர் வீக் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது... பெண்கள்,குழந்தைகள் இப்படி...யாராயிருந்தாலும் அவர்களுக்கு உடனே உதவுவார்கள்...பெண்களுக்கு அதிகம் பேர்  உதவுவது இதனால்தான். சில திரைப்படங்களில் சொல்லுவது போல் பாலுணர்வினால் மட்டுமல்ல...
2. உதவ முடியும் என்ற நம்பிக்கை  நெடுஞ்சாலை விபத்துகளில் உதவாது போகும் பலர் சொல்லும் காரணம் - அங்கே ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க... இதுல நான் போய் என்ன பண்ண முடியும்...
இறங்கிப்பார்த்தால் தானே தெரியும்.. எது தடுக்கிறது???
நம்மால் உதவ முடியுமா என்ற சந்தேகம், நம்மை விட உதவக்கூடியவர்கள் இருந்து அவர்கள் நம்மை அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற பயம், சட்டரீதியான சிக்கல்கள், நாம் செய்வது சரியா? தவறா? என்று தெரியாத நிலை...

இந்த பயங்களையும் சந்தேகங்களையும் தாண்டும் மனிதர்களே உதவி செய்ய இறங்குகிறார்கள்...

4. என்ன உதவி செய்வது? ஒரு விபத்து நடந்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு களேபரமான சூழல் நிலவும் அங்கே... சிலர் அடிப்பட்டவர்களை தூக்குவார்கள்... சிலர் வாகனங்களை வழி மாற்றுவார்கள்... சிலர் ஆம்புலன்சை அழைப்பார்கள்... இதுதான் செய்ய வேண்டும் என்று எப்படி முடிவெடுக்கிறார்கள்... அது அவரவர்கள் அனுபவத்தையும், தன்னம்பிக்கையையும் பொருத்தது...

இத்தனையும் எழுத பேசத்தான் நிறைய நேரமாகும்... நிஜ வாழ்வில் இதை  மனதளவில் கடப்பதற்கு சில நொடிகளே ஆகும்...

இது போன்ற ஆராய்ச்சிகள் மனிதம் மறக்கும் காரணத்தை சொல்கின்றன... இது போன்ற உதவாத கரங்கள் எந்த ஒரு நாட்டின், இனத்தின் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை. இன்றைய தினம் உலகின் அனைத்து நாடுகளிலும் மனிதம் தழைக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள்... Prosocial Psychology என்று குழந்தைகளிடம், வேலை செய்யும் இடங்களில் என்று பல்வேறு நிலைகளில் அதற்காக முயற்சிக்கிறார்கள்... பல நம்பிக்கை தரும் வெற்றிகளும் பெற்று வருகிறார்கள்...